;
Athirady Tamil News

திருட்டு பட்டம் சுமத்தி போலீஸ் தாக்கியதால் நகைக்கடை ஊழியர்-மனைவி தற்கொலை..!!

0

கேரளாவில் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் கைதி மரணம், போலீஸ் தாக்கியதால் அவமானத்தில் தற்கொலை போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருட்டு பட்டம் சுமத்தி போலீஸ் தாக்கியதால் நகைக்கடை ஊழியர் ஒருவர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டுள்ள பரபரப்பு சம்பவம் நடந்து உள்ளது. அந்த நகைக்கடை ஊழியரின் பெயர் சுனில்குமார் (வயது 36). இவர் பத்தனம்திட்டா அருகே சங்கனாச்சேரியில் உள்ள ஒரு நகைக்கடையில் நகை செய்து கொடுக்கும் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவர் செய்து கொடுத்த தங்க நகையில் 600 கிராம் தங்கம் குறைந்து இருப்பதாக நகை கடை உரிமையாளர் சஜிகுமார் குற்றம் சுமத்தி உள்ளார். மேலும் இவர் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கவுன்சிலராகவும் உள்ளதால் தனது செல்வாக்கை பயன்படுத்தி சங்கனாச்சேரி போலீசில் ஊழியர் சுனில்குமார் மீது புகாரும் செய்தார்.

இதைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சமீர்கான் தலைமையிலான போலீசார் சுனில்குமார் மற்றும் அவரது மனைவி ரேஷ்மா ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சுனில்குமார் மறுத்தார். இதனால் போலீசார் அவரை மனைவியின் கண் முன்பே கடுமையாக தாக்கி உள்ளனர். இதை தடுக்க முயன்ற மனைவி ரேஷ்மாவை ஆபாசமாக பேசி உள்ளனர்.

12 மணி நேரம் நடந்த இந்த விசாரணையின் போது நகைக்கடை உரிமையாளர் சஜிகுமாரும் போலீஸ் நிலையத்தில் இருந்துள்ளார். 600 கிராம் தங்கத்தை மறுநாள் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி அவர்கள் இருவரையும் வீட்டுக்கு போலீசார் அனுப்பி விட்டனர்.

வீடு திரும்பிய சுனில் குமாரும், ரேஷ்மாவும் திருட்டு பட்டம், போலீஸ் விசாரணை போன்ற அவமானங்களால் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் இருவரும் தங்கள் சாவுக்கு நகைக்கடை உரிமையாளர் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தான் காரணம் என்று உருக்கமாக கடிதமும் எழுதி வைத்து இருந்தனர்.

மேலும் சுனில்குமார், தற்கொலை செய்வதற்கு முன்பு தனது சகோதரர் அணில் குமாருக்கு போன் செய்து நடந்த விபரங்களையும் கூறி உள்ளார்.

இதுபற்றி அணில்குமார் உயர் போலீஸ் அதிகாரியிடம் புகார் செய்தார். அவர்கள் இதுபற்றி விசாரணை நடத்தி சப்-இன்ஸ்பெக்டர் சமீர்கானை ஆயுதப்படைக்கு மாற்றி நடவடிக்கை எடுத்தனர்.

இதற்கிடையில் நகைக்கடை ஊழியர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கண்டித்து சங்கனாச்சேரியில் காங்கிரசார் இன்று பந்த் போராட்டம் அறிவித்து உள்ளனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 4 =

*