;
Athirady Tamil News

மாகாணசபையில் பிரிந்து நின்றால் தமிழர்களின் அரசியல் சூன்யமாகும்- சிவசக்தி ஆனந்தன்..!!

0

மாகாணசபையில் பிரிந்து நின்றால் தமிழர்களின் அரசியல் சூன்யமாகும்
எச்சரிக்கிறார் சிவசக்தி ஆனந்தன் எம்.பி

மாகாணசபையில் பிரிந்து நின்றால் தமிழர்களின் அரசியல் சூன்யமாகும் என வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

கல்நாட்டியகுளம் பகுதியில் வட மாகாணசபையின் நிதியொதுக்கீட்டில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையினால் அமைக்கப்பட்ட சுற்றுலாத்தளத்தில் சிறுவர் பூங்காவினை மக்களிற்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் உள்ள மூன்று உள்ளுராட்சி மன்றங்களை தவிர அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் நிதிப்பற்றாக்குறை காணப்படுகின்றது. இதன் காரணமாக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதில் பல இடையூறுகள் காணப்பட்டு வருகின்றது. இதற்கான நிதியை பெற்றுக்கொடுக்க மாகாண உள்ளுராட்சி அமைச்சர் என்ற ரீதியில் முதலமைச்சரிடம் கோரிக்கையை முன்வைத்தாலும் கூட மாகாணசபைக்கான நிதியை மத்திய அரசு கடந்த மூன்று வரவு செலவுத்திட்டத்தினூடாக குறைத்தே வழங்கியிருக்கிறது. ஆகவே இந்த மத்திய அரசின் ஊடாக நிதியை பெற்றுக்கொடுக்கின்ற பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கே உள்ளது.

அதற்கும் மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களிற்கான அதிகாரங்களை முழுமையாக வழங்குவதற்கு நிதியையும், அதிலும் விசேடமாக போரினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்காக முதலமைச்சர் நிதியத்தினை ஆரம்பிக்க வேண்டும் என்ற முயற்சினை கடுமையாக முயற்சித்துக் கொண்டிருந்தாலும் கூட மத்திய அரசு இது தொடர்பாக எதுவித கருசனையையும் காட்டவில்லை.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் பல்வேறுபட்ட தேவைகள் காணப்படுகின்றன. முதலமைச்சர், அமைச்சர்களினால் செய்ய வேண்டிய தேவை அதிகமாகவே காணப்படுகின்றது. அத்துடன் மாகாணசபைக்கான அதிகாரங்களை கூட வழங்குவதற்கு மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றவர்களும் முயற்சிகளை எடுக்கவில்லை.

இந்நிலையில் இந்த அரசு எவ்விதமான அபிவிருத்தி திட்டங்களையும் போரினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசங்களில் முன்னெடுக்கப்படாத நிலையில் மாகாண முதலமைச்சருக்கு எதிராக இனவாத கருத்துக்களை ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சர்களும் முன்வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். முதலமைச்சருக்கு கூட புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு அவர்களிடம் காணப்படுகின்றது.

தமிழ் மக்களிற்கு சரியான கொள்கையை முன்னிறுத்தி அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்னிறுத்தி கடந்த நான்கு வருடங்களாக இந்த மாhணசபை சரியாக இயக்க வேண்டும், அல்லது இந்த மாகாணசபைக்கான சரியான அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் குரல் கொடுத்துக்கொண்டு இருக்கின்ற முதலமைச்சரை குற்றவாளி கூண்டில் ஏற்றி கல்லெறிய வேண்டும் என்று சிந்திக்கின்ற நிலைமைதான் காணப்படுகின்றது.

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் எந்தக்கட்சி என்ன முடிவெடுக்கிறார்களோ இல்லையோ தமிழ் மக்களை பொறுத்த வரை மீண்டும் வடக்கு மாகாணத்திற்கான முதலமைச்சராக விக்னேஸ்வரன் அவர்களே வரவேண்டும் என விரும்புகிறார்கள். ஆகவே அந்த விருப்பத்தை நிறைவேற்றுகின்ற பொறுப்பு மக்களாகிய ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

இந்நிலையில் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்னிறுத்தி செயற்பட்டு வரும் விக்னேஸ்வரனுக்கு எதிராக தெற்கின் இனவாதிகள் செயற்படுவதை நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. ஆகவே ஒரு கொள்கைப்பிடிப்புள்ள முதலமைச்சர் வடக்கு மாகாணத்திற்கு தேவை என்பது உறுதியானது அந்தவகையில் அதனை சரியாக உணர்ந்து நாம் கொள்கைப்பிடிப்புள்ள பலமான ஐக்கிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கின்றது. ஆகவே அந்த தேவையை உணர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்லது அதற்கு வெளியால் இருப்பவர்கள் ஒரு கொள்கையின் அடிப்படையில் ஐக்கியபடவேண்டிய தேவை இருக்கின்றது. அவ்வாறு இல்லாமல் மாகாணசபை தேர்தலில் பிரிந்து நிற்போமாக இருந்தால் நிச்சயமாக தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் சூனியம் ஆவதை யாரும் தவிர்க்க முடியாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*