;
Athirady Tamil News

வடக்கு வன்முறைகளுக்கு பொலிஸாரின் கவனயீனமா காரணம்? – சி.வி. சந்தேகம்..!!

0

ஏனைய மாகாணங்களை விட வடக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும் வன்முறைகள் அதிகரிக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரின் கண்காணிப்பு நடவடிக்கைளில் ஏதாவது குறைபாடுகள் இருக்கின்றனவா என்பதை ஆராய்வது அவசியமென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளின் போது, மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றும் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவை அமைக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

வவுனியா, கல்நாட்டியகுளம் பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) சுற்றுலாத்தளம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முதலமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

“வடக்கில் சுற்றுலாத் தளங்கள் புனரமைக்கப்படும் போது உள்ளூர் மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இந்த அமைவிடங்களைப் பாதுகாத்தல் அவசியமானதாகும். விசேடமாக பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடும் பொலிஸாரின் உதவிகள் இன்றியமையாதன. அப்பகுதியை மதுபோதையற்ற, போதைப் பொருள் பாவனையற்ற ஒரு பிரதேசமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறான பல இயற்கை அழகுடைய சுற்றுலாத்தளங்கள் மதுப்பிரியர்களின் கைகளில் சிக்கி அவர்கள் மட்டும் ஆட்சி செய்கின்ற பிரதேசமாக மாற்றப்பட்டிருப்பது கவலையளிக்கிறது.

இன்று மதுபாவனை, போதைப் பொருள் பாவனை ஆகியவற்றால் சிக்கிச் சீரழிகின்ற ஒரு பகுதியினர் வன்முறைகளிலும் களவுகளிலும் ஈடுபட்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

இவர்களை இவ்வாறு உருவாக்குவதற்கு ஏதாவது தீய சக்திகள் முனைகின்றனவா அல்லது உலகளாவிய ரீதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்ற கும்பல்களின் பிரதிநிதிகளாக இவர்கள் இங்கு செயற்படுகின்றார்களா என்பதை அறியமுடியவில்லை.

எனினும் வடக்குப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுகின்ற போதிலும் தினமும் போதைப் பொருட்கள் வட. மாகாணத்திற்குள் கொண்டுவரப்படுவதும் பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதும் அதிர்ச்சியூட்டுகின்றன.

இந்த நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். எமது எதிர்காலத்தின் தலைவர்களாக விளங்கவேண்டிய இளைஞர்கள் பலர் அநியாயமாக துர்நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமது உடல் வலுக்களை இழப்பதுடன் விபத்துக்களில் சிக்கி உயிர்களையும் மாய்த்துக்கொள்கின்றனர்.

இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரின் கண்காணிப்பு நடவடிக்கைளில் ஏதாவது குறைபாடுகள் இருக்கின்றனவா என்று ஆய்ந்தறிவதும் அவசியமானதே. வன்முறையற்ற சமூகத்தை உருவாக்க அனைவரும் இணைந்து செயற்படவேண்டும்” என அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 7 =

*