;
Athirady Tamil News

வவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை!!: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர்.. மாட்டிக்கிட்ட பெண் புலிகள்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)

0

வவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை!!: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)

வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது.

உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை உடைப்பு என்பதால் மேதின சிறை உடைப்பு என்றும் அழைக்கலாம்.

வவுனியா நகரின் மையத்தில் விசாலமான நிலப்பரப்பில் வன்னிப் பகுதியின் பிரதான இராணுவ முகாமை இந்தியப் படையினர் அமைத்திருந்தனர்.

அந்த பிரதான முகாமின் ஒரு பக்கத்தில் புகையிரத நிலையப் பக்கமாக முக்கோண வடிவத்தில் மூன்று கட்டங்களில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இங்கிருந்த கைதிகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

1. புலிகள் இயக்க உறுப்பினர்கள்.
2. புலிகளின் ஆதரவாளர்கள்.
3. சுந்தேகத்தின் பெயரில் கைதான சாதாரண மக்கள்
4. புளொட் இயக்கத்தினர்.

புலிகள் இயக்க உறுப்பினர்களில் ஆண்களும், பெண்களும் இருந்தனர். இவர்களில் பலர் தமிழ்நாட்டு சிறையில் இருந்து கொண்டுவரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

புலிகள் இயக்க உறுப்பினர்கள் மொத்தம் 37 பேர் இருந்தனர். அதில் நான்குபேர் பெண்கள்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினரின் புகார்கள் காரணமாக கைது செய்யப்பட்ட புளொட் இயக்க உறுப்பினர்கள் 22பேர் இருந்தனர்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்க உறுப்பினர்களை தாக்கியதாகவும், படுகொலை செய்ததாகவும் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

எனினும் புலிகள் இயக்கத்தினரை விட புளொட் உறுப்பினர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன.

இதனால் சிறைக்குள் இருந்த புளொட் உறுப்பினர்களை ~விருந்தினர்கள்| என்றே சிறைக்குள் இருந்த புலிகள் அழைத்தனர்.

புலிகள், புளொட் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 89பேர் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர்.

தினமும் காலை, மாலை, மதியம் என மூன்று தடவைகள் கைதிகள் வரிசையாக நிற்கவைக்கப்பட்டு எண்ணிக்கை சரிபார்க்கப்படும்.

மாலை ஆறு மணியுடன் விடுதிகள் அனைத்தும் மூடப்படும். இரவில் வெளிச்சம் இருக்காது.

தினமும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரையும் கைதிகளுக்கு வேலை கொடுக்கப்படும்.

குப்பை கூழங்களை அகற்றுதல் செடி கொடிகளை வெட்டுதல், இராணுவத்துக்கு பதுங்கு குழிகளை வெட்டிக் கொடுத்தல், விறகு கொத்துதல், சமையல் பாத்திரங்களைக் கழுவிக்கொடுத்தல் என்பவை இந்த வேலைகளுள் அடங்கும்.

வாரத்தில் ஒருநாள் சனிக்கிழமைகளில் கைதிகளைப் பார்வையிட உறவினர்கள் அனுமதிக்கப்படுவர்.

உறவினர்கள் கொண்டுசெல்லும் பொருட்கள் கடும் சோதனைக்கு உட்படும். பின்னர் உரையாட 5 நிமிடம் கொடுக்கப்படும். இந்திய இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் கூடவே இருந்து, என்ன கதைக்கிறார்கள் என்று காதைத் தீட்டிக்கொண்டு இருப்பார்.

தப்பிச் செல்லத் திட்டம்

தமிழ்நாட்டு சிறையில் இருந்து கொண்டுவந்து வவுனியாச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த புலிகளுக்கு அந்தச் சிறை அமைந்திருந்த வெளிச் சூழல் முதலில் புரியவில்லை.

சிறை எங்கே இருக்கிறது. அங்கிருந்து புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதி எங்கிருக்கிறது? புறக்காவல் நிலைகள் எவ்வாறு உள்ளன? என்பவை தெரியாமல் சிறை உடைப்புக்கு திட்டமிட முடியாது.

இந்தியப் படையினர் தம்மை அறியாமலேயே சிறையில் இருந்து புலிகளுக்கு உதவினார்கள்.

வவுனியாவில் கைது செய்யப்பட்ட புலிகளையும் அதே சிறையில் ஏனைய புலிகளுடன் ஒன்றாக பூட்டி வைத்தனர்.

புறச்சூழல்களை அறிந்து சிறை உடைப்புக்குத் திட்டமிட அது வசதியாகிவிட்டது.

தப்பிச் செல்வதற்கான பாதையை தெரிவு செய்ய வவுனியாவில் கைதான புலிகள்தான் வழிகாட்டினார்கள்.

சிறைக்குள் 37 புலிகள் இருந்தனர். முதலில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே சிறை உடைப்புத் திட்டத்தை வகுத்தனர். இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் போது ஒரே இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் இரகசியங்கள் எல்லாம் தெரிவிக்கப்படுவதில்லை.

சிறை உடைப்பு திட்டமும் அவ்வாறுதான் தீட்டப்பட்டது. முதலில் நோட்டம் பார்ப்பது. பின்னர் திட்டத்தை வரைவது. அதன்பின்னர்தான் ஏனைய சக உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது என்று முடிவானது.

அந்தச் சிறை எப்படி காவல் காக்கப்படுகிறது? அவர்களின் துப்பாக்கிகள் எத்தகையவை? அவர்களின் உட்ற்பலம் எப்படியானது? அங்கு பாதுகாப்பில் உள்ள ஓட்டைகள் என்ன? போன்ற தகவல்களை ஆராயத் தொடங்கினர்.

சிறைக்குள் இன்னொரு பகுதியில் புளொட் உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களுக்கு தமது திட்டம் கசிந்துவிடக்கூடாது என்பதில் புலிகள் கவனமாக இருந்தனர்.

ஆரம்பத்தில் புலிகளுக்கும், புளொட் உறுப்பினர்களுக்கும் இடையே சிறைக்குள் சிறு தகராறுகள் எழும்.

“காட்டிக் கொடுப்பாளர்கள், ”துரோகிகள்  என்று புலிகள் சொல்வர். உடனே புளொட் உறுப்பினர்களுக்கு கோபம் வந்துவிடும். வா ய்த்தர்க்கம் நடக்கும்.

சிறை உடைப்புக்கான திட்டம் தீட்டத் தொடங்கியதும் புளொட் உறுப்பினர்களுடன் வாய்த்தர்க்கப்படுவதை குறைத்து கொள்ளத் தொடங்கினார்கள் புலிகள்.

தொர்ந்து பிரச்சினைப்பட்டால், தாங்கள் என்ன செய்கிறோம் என்றும் கூர்ந்து பார்த்துக்கொண்டு திரிவார்கள் என்பதால்தான் புலிகள் அப்படிச் செய்தனர்.

மாற்றங்கள்

ஒரு தாக்குதலுக்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம்.

அப்படியான மாற்றங்களில் தாக்குதல் திட்டத்துக்கு உதவிகரமாக அமைபவையும் உள்ளன. அத்தகைய மாற்றங்கள் பழத்தை நழுவி பாலில் விழச் செய்பவை. அப்படியொரு மாற்றம்தான் வவுனியா சிறையிலும் ஏற்பட்டது.

முதலில் மெற்றாஸ் ரெஜிமண்டைச் சேர்ந்தவர்கள் தான் சிறைக்கு பாதுகாப்பாக இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தென்னிந்தியர்கள். பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

அவர்களுக்கு தமிழ் தெரியும் என்பதால் சிறைக்குள் உள்ள கைதிகளுடன் சகஜமாகப் பேசி இரகசியங்களை அறிந்துவிடுவர்.

யாராவது ஒரு கைதிக்கு புலிகளின் நடவடிக்கையில் சிறிது சந்தேகம் வந்தால்கூட படையினருடன் சகஜமாகப் பேசும்போது சொல்லிவிடக்கூடும்.

ஆனால் மெற்றாஸ் ரெஜிமெண்டை அங்கிருந்து மாற்றிவிட்டு, பஞ்சாப் சீக்கிய ரெஜிமெண்டை, மாராஷ்டிர ரெஜிமெண்ட், கூர்க்கா ரெஜிமெண்ட் என்று மாற்றி காவல் கடமையில் ஈடுபடுத்தினார்கள்.

வடக்கு-கிழக்கில் இந்தியப் படையினருக்கு எதிராக புலிகள் ஏதாவது தாக்குதல் நடத்தினால், அது சிறிய தாக்குதலா? பெரும்தாக்குதலா என்பதை சிறையில் உள்ள புலிகள் அறிந்து கொள்வர்.

அது எப்படித் தெரியுமா? கைதிகளுக்கு கொடுக்கப்படும் தேநீர் நிறுத்தப்பட்டு, சிறை ஜன்னல்கள் மூடப்பட்டு, கைதிகளை வெளியே செல்லவிடாமல் அடைத்து வைத்திருந்தால் இந்தியப் படைக்கு கணிசமான இழப்பு என்று தெரிந்துவிடும்.

மலசலம் கழிக்கச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு, உணவுக்குள் மண்போட்டு கொடுக்கப்பட்டால் படையினருக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

இவ்வாறான நாட்களில் சிறைச்சாலை அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும்.

மற்றுமொரு மாற்றம் சிறைக்காவலில் செய்யப்பட்டது. அதுவும் சிறை உடைப்புக்கு வாய்ப்பாக அமைந்தது.

இந்திய மத்திய ரிசேவ் பொலிஸ் சி.ஆர்.பி. என்று சுருக்கமாக அழைக்கப்படும்.

சிறை நிர்வாகத்தை சி.ஆர்.பி. பொறுப்பேற்றது. சிறைக்கு வெளியே காவல் செய்யும் பொறுப்பு மட்டும் இந்தியப் படையினருக்கு வழங்கப்பட்டது.

சி.ஆர்.பி. போருக்குச் செல்வதில்லை. அதனால் வெளியே இந்தியப் படையினர் புலிகளால் தாக்கப்பட்டால்கூட, சிறைக்குள் உள்ளவர்களைத் துன்புறுத்தமாட்டார்கள்.

இராணுவத்தில் உள்ளவர்கள் படிக்காதவர்கள், ஜாதியில் குறைந்தவர்கள் என்றெல்லாம் சி.ஆர்.பி.யினர் கைதிகளிடம் குறை கூறுவார்கள்.

இராணுவத்தினருக்கும், சி.ஆர்.பி.க்கும் இடையேயான முரணடபாடுகளும் புலிகளுக்கு உதவிகரமாக அமைந்தன.

pppppppppppp வவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை!!: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 148) வவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை!!: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 148) pppppppppppp

மே 1

இறுதியாக திட்டம் பூர்த்தியானது. மே 1ம் திகதி சிறையை உடைத்துத் தப்பிச் செல்வது என்று தீhமானித்தனர்.

மே 1. மாலை 5.30 மணி.

இரவு உணவுக்காக கைதிகளின் அறைக் கதவுகள் ஒன்றின் பின் ஒன்றாகத் திறக்கப்பட்டன.

அவை மீண்டும் 6 மணிக்குள் மூடப்பட்டுவிடும். ஆரை மணிநேர அவகாசம் மட்டும்தான்.

ஆறு மணிக்குள் தாக்குதல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். சகல புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கும் கடைசிக் கட்டம் நெருங்கியதும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

எந்தக் காவலரணை யார் தாக்குவது என்று பொறுப்புக்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன.

ஆண் கைதிகள் வைக்கப்பட்டிருந்த சிறையில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்ட மற்றொரு இடத்தில்தான் பெண் கைதிகள் வைக்கப்பட்டிருந்தனர். இடையே கம்பிவேலி போடப்பட்டிருந்தது.

பெண்கள் பகுதிக்கு எப்படியோ கடிதம் ஒன்றை புலிகள் அனுப்பிவைத்தனர்.

இன்று 5-6 மணிக்கு இடையில் சிறையை உடைத்து வெளியேறப் போகிறோம்.

வெளியே இருந்து உதவி கிடைக்கும். உங்கள் காவலாளியை நாங்கள் தாக்கும்போது, உங்கள் கதவை உடைத்து வெளியேறுங்கள் என்று கடிதத்தில் தெரிவித்தனர்.

5.30 மணிக்கு சிறைக் கதவுகள் திறக்கப்பட்டதும் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் சமையல் அறைக்குச் சென்று ஒரு கோடாலியை எடுத்துக் கொண்டார்.

சிறைக்குள் மட்டும் நான்கு காவலரண்கள் இருந்தன. அதில் ஒன்று பெண்கள் பகுதியில் இருந்தது.

இரும்புக்கம்பி, விறகுக் கட்டைகள் கோடாலி சகிதம் தமக்கு ஒதுக்கப்பட்ட காவலரண்களை நோக்கி புலிகள் செல்லும் போதுதான் அந்த எதிர்பாராத நிகழ்வு நடந்தது.

சிறை வாசலில் ஒரு இராணுவட்ரக் வந்து நின்றது. அதில் இருந்து பத்துக்கு மேற்பட்ட இராணுவத்தினர் குதித்தனர்.

புலிகளுக்கு பேர்ரதிர்ச்சி. தங்கள் திட்டம் தெரிந்துதான் வந்து விட்டார்களோ என்று திகைத்துப் போயினர்;.

மோதல்

கோடாலியைக் கொண்டுபோய் சமையல் அறையில் வைக்கவும் முடியவில்லை. இரும்புக் கம்பி விறகுக்கட்டைகளை வீசுவதா என்றும் புரியவில்லை. ஒரு முடிவுக்குவர முடியாமல் விழித்துக்கொண்டிருக்க, அந்த ட்ரக் வண்டி அடுத்த நிமிடமே புறப்பட்டுச் சென்றுவிட்டது.

இறங்கிய இராணுவத்தினரும் மறுபடி ஏறிச் சென்றுவிட்டனர். ட்ரக் வண்டி சென்றுவிட்டது, தம்மை கவனிக்கவும் இல்லை என்றதும் எல்லோரும் நிம்மதியாய் மூச்சு விட்டனர்.

அதேசமயம் இன்னொரு ஜீப் வண்டி சீறிக்கொண்டுவந்து சிறைவாசலில் நின்றது.

”அந்தக் கணத்தில் எமக்கு உலகமே வெறுத்தது, என்று நினைவு கூர்ந்திருந்தார் ஒரு புலி.

வந்த ஜீப் தனது அலுவலை முடித்துக் கொண்டு வந்த வேகத்திலேயே திரும்பிச் சென்றது.

சரியாக 5.45 மணி.

தாக்குங்கள் என்று சைகை காட்டிக் கொண்டு காவலரண்ணை நோக்கி முன்னேறினார்கள்.

காவலரண் 3ல் நின்ற காவலாளிக்கு கோடாலியால் ஒரே கொத்து. அவன் கையில் இருந்த எஸ்.எல்.ஆர் கைப்பற்றப்பட்டது.

காவலரண் 6ல் நின்ற காவலாளியும் அதேநேரம் தாக்கப்பட்டு அவனிடமிருந்த எஸ்.எல்.ஆர் துப்பாக்கி பறிக்கப்பட்டது.

காவலரண் 4ல் தான் இயந்திரத் துப்பாக்கி இருந்தது. துப்பிச் செல்பவர்களுக்கு ஆபத்தானது அதுதான்.

அந்த இயந்திரத் துப்பாக்கி சட சடக்கத் தொடங்கிவிட்டால் பலரது உயிரைக் குடித்துவிடும்.

விறகுக் கட்டையுடனும், இரும்புக் கம்பியுடனும் தன்னை நோக்கி புலிகள் ஓடிவருவதை இயந்திரத் துப்பாக்கியுடன் நின்ற காவலர் கண்டுவிட்டார்.

தன்னை நோக்கி ஓடிவருபவர்களைத் தாக்குவதற்கு பதிலாக, இயந்திரத் துப்பாக்கியுடன் காவலரணில் நின்ற சிப்பாய் தன் தலையில் அடித்துக் கொண்டு கத்தக் தொடங்கினான். ஏன் சுடாமல் கத்துகிறான் என்று புலிகளுக்கு புரியவில்லை.

ஓடிச்சென்ற ஒரு புலி அவன்மீது பாய்ந்து அவனை தரையோடு தரையாக அமுக்கிப்பிடிக்க, இன்னோரு புலி அவனது விலா எலும்பு முறியும்வரை இரும்புக் கம்பியால் அடித்தார்.

பின்னர் இயந்திரத் துப்பாக்கியை பிடித்து இழுத்தபோதுதான் சிப்பாய் கத்திய காரணம் விளங்கியது.

இயந்திரத் துப்பாக்கியின் அடிப்பாகம் மண் மூட்டையில் கிடக்க, குழல் பகுதி ஒரு சணல் கயிற்றினால் கட்டி காவலரணின் மேல் இருந்த ஒரு கட்டையுடன் இணைக்கப்பட்டிருந்தது. அது சிறையின் வெளிப்புறத்தைப் பார்த்தபடி தொங்கிக் கொண்டிருந்தது.

ஊடனடியாக அதைத் திருப்பி உள்புறமிருந்து ஓடி வருபவர்களை நோக்கிச் சுட முடியவில்லை. அதனால் தான் சிப்பாய் கத்தினான்.

இதே சமயம் சிறைக்கள் உள்ள சி.ஆர்.பி.யினரும் தாக்கப்பட்டு மடக்கப்பட்டனர்.

women_wing வவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை!!: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 148) வவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை!!: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 148) women wingகடைசிக்கட்டம்

பெண்களை விடுவிக்க காவலரண் 1ஐத் தாக்க சில புலிகள் ஓடிச் சென்றனர். பெண்கள் சிறைக்கு அண்மையில்தான் படை பிரிகேடியரின் வீடு இருந்தது.

அங்கு காவல் நின்ற இராணுவத்தினர் காவலரண் 1ஐ நோக்கி சென்ற புலிகளைக் கண்டுவிட்டு சுடத் தொடங்கினார்கள். காவலரண் 1ல் இருந்த சிப்பாயின் துப்பாக்கியும் வாயைத் திறந்தது.

கணேசலிங்கம் என்பவர் சூடுபட்டு விழுந்தார். காவலரண் 1ஐ நோக்கி முன்னேற முடியாத புலிகள் பின்னடைந்தனர்.

காவலரண் 1ஐ தாக்கும் முயற்சியில் ஈடுபட்டால் யாரும் தப்பவும் முடியாது. உயிருடன் மீளவும் இயலாது என்பதால் முன்னேரே தீர்மானிக்கப்பட்ட பாதையில் தப்பிச் செல்லத் தொடங்கினார்கள்.

அப்போது இந்தியப் படையினருக்கும் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பெனா, சிறி, செல்வந்தன் ஆகியோர் பலியாகினர். எஸ்.எல்.ஆர் துப்பாக்கிகளால் சுட்டபடியே ஏனைய புலிகள் தப்பிச் சென்றனர்.

சிறையில் இருந்து மொத்தம் 42 பேர் தப்பிச் சென்றனர். பெண் புலிகள் தப்பிச் செல்ல முடியவில்லை.

சிறைக்கு அரை மைல் தூரத்தில் உள்ள பண்டாரிக்குளம் என்ற இடத்தில் புலிகளின் வாகனம் ஒன்று வந்து காத்திருந்தது. தப்பிச் சென்ற புலிகள் அதில் ஏறிக்கொண்டனர்.

இந்தியப் படையினரின் காலத்தில் நடைபெற்ற பாரிய சிறை உடைப்பு இதுவாகும்.

(தொடர்ந்து வரும்)
அரசியல் தொடர் “அற்புதன்” எழுதுவது
தொகுப்பு: கி.பாஸ்கரன்- சுவிஸ்

You might also like

Leave A Reply

Your email address will not be published.