கூட்டமைப்பின் பாராளுமன்ற போனஸ் ஆசனங்களில் ஒன்றை கோரும் ரெலோ..?..!! (படங்கள்)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற போனஸ் ஆசனங்களில் ஒன்றை முன்னை நாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்திற்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் ரெலோவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சிறிகாந்தா, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உட்பட ரெலோவின் முக்கியஸ்தர்கள், வடக்கு கிழக்கைச் சேர்ந்த கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கலந்து கொண்டிருந்த கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களில் சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற போனஸ் ஆசனங்களில் ஒன்றை முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்திற்கு வழங்க ரெலோ கட்சியின் தலைமை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பாக கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, எமது கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பல விடயங்கள் குறித்து பேசப்பட்டன. கலந்து கொண்ட சிலர் போனஸ் ஆசனத்தை கொடுப்பது தொடர்பில் கூறியிருந்தனர். ஆனாலும் எந்த வித தீர்மானமும் இது தொடர்பில் இன்று எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போனஸ் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறிஸ்கந்தராஜா, துரைரட்ணசிங்கம் ஆகிய இருவரையும் நீக்கி புதியவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.