;
Athirady Tamil News

ரஷ்யாவை 4-3 என வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்த குரோஷியா..!!

0

உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று முன்தினம் காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

நேற்று (07) இரவு 11.30 மணிக்கு தொடங்கிய நான்காவது காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யா – குரோஷியா அணிகள் மோதிக் கொண்டன.

தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 31 ஆவது நிமிடத்தில் ரஷ்யா வீரர் டெனிஸ் செரிஷேவ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ரஷ்யா அணி 1-0 என முன்னிலை வகித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்டத்தின் 39 ஆவது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஆண்ட்ரே கிரிமெரிக் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் ரஷ்யா, குரோஷியா அணிகள் 1-1 என சமனிலை வகித்தன.

இதனையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

இதை பயன்படுத்தி ஆட்டத்தின் 100 ஆவது நிமிடத்தில் குரோஷியா வீரர் டொமகோஜ் விஜே ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். முதலாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா 2-1 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் 115 ஆவது நிமிடத்தில் ரஷ்யா அணியின் பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் சமனிலை வகித்தன. இறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது.

முதலில் ரஷ்யாவின் வாய்ப்பை குரோஷியா கோல்கீப்பர் தடுத்துவிட்டார். ஆனால் குரோஷியா அணி முதல் வாய்ப்பில் கோல் போட்டது.

இரண்டாவது வாய்ப்பை ரஷ்யா கோலாக்கியது. ஆனால் குரோஷியாவின் வாய்ப்பை ரஷ்யா கோல் கீப்பர் தடுத்துவிட்டார். இதனால் மீண்டும் 1 – 1 என சமனானது.

மூன்றாவது வாய்ப்பை ரஷ்யா வீணாக்கியது. குரோஷியா மீண்டும் கோலாக்கியது. இதனால் 1-2 என முன்னிலை பெற்றது.

நான்காவது வாய்ப்பில் ரஷ்யாவும், குரோஷியாவும் கோல் அடித்ததால் 2-3 என முன்னிலை பெற்றது.

இறுதியாக, ஐந்தாவது வாய்ப்பை பயன்படுத்தி ரஷ்யா கோல் போட்டதால் 3-3 என சமனானது. இறுதிவாய்ப்பில் குரோஷியா மீண்டும் ஒரு கோல் அடித்ததால் 4-3 என வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 5 =

*