தென்னிலங்கையின் மனோநிலையை விஜயகலா பிரதிபலித்திருக்கின்றார்: சுமந்திரன்..!!

புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற கருத்தை உருவாக்கும் வகையில் தென் இலங்கை தலைவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ள நிலையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் உரையிலும் அவ்வாறான கருத்து பிரதிபலித்திருக்கின்றது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
றுவான்வெல்ல பிரதேசத்தில் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பிரிவினைவாதக் கருத்துக்களை வெளியிடுவதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய தமிழர் விடுதலை கூட்டணியினர், 1989 ஆண்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தபோது விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
அதில், தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டு அதிகார பரவலாக்கல் ஊடாக தீர்வினை பெறுவதற்கு தயாராக இருக்கின்ற செய்தி வெளிப்படுத்தப்பட்டது. இருப்பினும் 89 ஆம்ஆண்டுக்கு பின்னர் அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதிகள் பல்வேறு தீர்வு திட்டங்களை முன்மொழிந்தனர்.
ஆனால் தற்போது, அவ்வாறான அதிகாரங்களை வழங்க தற்போதை ஆட்சியாளர்கள் தயங்குகின்றனர். விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் முன்னர் போன்று அதிகாரங்களை வழங்க முடியாது என்பதையே அதற்கு காரணமாக கூறுகின்றனர்.
அதாவது, தமிழ் மக்கள் அதிகாரங்களை பெறவேண்டுமாயின் விடுதலைப் புலிகள் இருக்க வேண்டும் என்கின்ற கருத்தை தென்னிலங்கை ஆட்சியாளர்கள்தான் உருவாக்குகின்றார்கள்.
இவ்வாறான நிலையில் அமைச்சர் விஜயகலாவினால் வெளியிடப்பட்டுள்ள கருத்திற்கு அவரைக் குற்றஞ்சாட்டக் கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.