;
Athirady Tamil News

படுகொலை செய்யப்பட்ட றெஜினாவிற்கு நீதி கோரி மட்டக்களப்பு – புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி சிவனேஸ்வரன் றெஜினாவிற்கு நீதி கோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவுக்கு முன்னால் நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில், சிறுவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும், அரசாங்கம் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும், அரசாங்கம் குற்றம் செய்வதவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலிறுத்தியிருந்தனர்.

தொடர்ச்சியாக சிறுவர்களும் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்படல் வேண்டும்.

இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவர்களுக்கு எதிராக உரிய தண்டனை வழங்கப்படல் வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் தெரிவித்தனர்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திருமதி இந்திரன் ஜெயசிலி தலைமையில் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்தும் பெண்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ரெஜினாவின் படுகொலையைக் கண்டித்தும் போதைப் பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று (திங்கட்கிழமை) புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட நாயக்கர்சேனை தமிழ் வித்தியலாய மாணவர்கள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் காலை 8.00 மணிக்கு பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.

இதன் போது மாணவர்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 3 =

*