ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்- இரண்டு பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது ராணுவம்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம், குண்டலன் எனும் இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை வேலையில் அப்பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வீட்டில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இருதரப்பிற்கும் இடையே துப்பாக்கி சூடு தொடர்ந்து நடைபெற்றதால், பயங்கரவாதிகள் மறைந்திருந்த வீட்டை பாதுகாப்பு படையினர் தாக்கி அழித்தனர். இதில், தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.