;
Athirady Tamil News

ராமர் பற்றி அவதூறு – தெலுங்கு நடிகர் கத்தி மகேஷ் ஊரை விட்டு வெளியேற்றம்..!!

0

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் பங்கேற்ற நடிகர் கத்தி மகேஷ் அதன் மூலம் பிரபலமானார். குறும்பட தயாரிப்பாளரும், சினிமா விமர்சகருமான அவர் தனியார் தெலுங்கு தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

கடவுள் நம்பிக்கை இல்லாத கத்தி மகேஷ், ஒரு டி.வி. விவாத நிகழ்ச்சியில் பேசியபோது, ராமர் பற்றி விமர்சனம் செய்து கருத்து தெரிவித்தார்.

இதுகுறித்து இந்து அமைப்பினர் ஐதராபாத் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து கத்தி மகேஷ் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ஸ்ரீபிடம் பீடாதிபதி பரிபூரிணானந்தா சுவாமிகள் கூறும்போது, ராமரை விமர்சனம் செய்த கத்தி மகேசை கைது செய்யும் வரை ஆன்மீது யாத்திரை நடத்தப்படும் என்று கூறி இருந்தார்.

இதைத் தொடர்ந்து, ஐதராபாத்தில் இருந்து நடிகர் கத்தி மகேசை 6 மாதங்கள் வரை ஊரை விட்டு வெளியேற்றவும், நகருக்குள் நுழைய தடை விதித்தும், தெலுங்கானா டி.ஜி.பி. மகேந்தர் ரெட்டி உத்தரவிட்டார்.

இதையடுத்து அவரை போலீசார் வேனில் ஏற்றி ஐதராபாத்தில் இருந்து சொந்த ஊரான சித்தூருக்கு கொண்டு சென்று இறக்கி விட்டனர்.

இதுகுறித்து டி.ஜி.பி. மகேந்தர் ரெட்டி கூறும்போது, தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மதக்கலவரமோ, சாதி பிரச்சினைகளோ இல்லை. ஆனால் ஒரு ஆண்டாக கத்தி மகேஷ் பலரை விமர்சனம் செய்து வருகிறார். ராமரை பற்றி இந்துக்களின் மனம் புண்படும்படி பேசியுள்ளார். இதனால் அவர் ஐதராபாத் நகருக்குள் நுழைய 6 மாத தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதக்கலவரங்களை தூண்டினாலோ, இனம், ஜாதி, அமைப்பினரை விமர்சித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*