;
Athirady Tamil News

அரியாலை கிழக்கு அ.த.க.பாடசாலை முடப்படும் அபாய நிலை..!!

0

அரியாலை கிழக்கு அ.த.க.பாடசாலை முடப்படும் அபாய நிலை.இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை.

1928ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பலரை உருவாக்கிய அரியாலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இன்று மூடப்படும் அபாய நிலையில் உள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

யாழ்ப்பாண நகரில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ள அரியாலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை J/90 கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்டுள்ள ஒரு பாடசாலையாகும். 1928 ஆம் ஆண்டு இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு பல நல்மாணாக்கர்களை உருவாக்கிய பாடசாலையாகும். நூற்றுக் கணக்கான மாணவர்கள் கல்விகற்ற அதே வேளை அங்கு கற்ற மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குக்கூடச் சென்றுள்ளனர்.

கடந்த வருடம் ஒரு மாணவி புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடுமையான யுத்த காலங்களிலும் அதிகளவான மாணவர்களுடன் இயங்கிய இப்பாடசாலையில் அப்போது பழமையான கட்டிடம் ஒன்றே இருந்தது. தரம் .1முதல் தரம்.9 வரை மாணவர்கள் கற்கும் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தகுதியான ஆசிரியர்களும் அங்கு கடமையில் இருந்தனர்.

ஆனால் இன்று தரம்.1 முதல் தரம்.7 வரை பத்து மாணவர்களுடனும் அதிபரை விடுத்து மூன்று ஆசிரியர்களுடனும் இப்பாடசாலை இயங்குகின்றது.

சென்ற ஆண்டு 18 மாணவர்கள் கல்வி கற்றனர். அவர்களில் ஒன்பது மாணவர்களை வேறு பாடசாலைகளில் கற்பதற்கு அனுமதியளித்து அதிபர் விடுகைப்பத்திரம் வழங்கியுள்ளார். இன்னும் உள்ளமாணவர்களை நீங்களும் வேறெங்காவது செல்லப்போகின்றீர்களா? என அதிபர் அடிக்கடி வினவி வருகின்றார். அதிபர் அசிரியர்களுடன் அடிக்கடி முரண்படுவதும் அவர்களில் சிலர் அங்கிருந்து வெளியேறிச் சென்றமையும் ஆதாரங்களாக உள்ளன.

அதிபர் அடிக்கடி பாடசாலையில் இருந்து குறித்த நேரத்திற்கு முன்னரே வெளியேறிச் செல்வதும், அதற்காக திணைக்களக்கடமையென சம்பவத்திரட்டுப் புத்தகத்தில் எழுதுவதும் தொடர்கதையாக உள்ளது. இவரது இத்தகைய செயற்பாடு மற்றைய அதிபர்களுக்கு இழுக்காக அமைவதோடு அக்கிராம மக்களின் மனங்களில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.

அரியாலைச் சந்தியில் இருந்து பாடசாலை செல்லும் வரை பயணம் செய்யமுடியாத அளவுக்கு வீதி படுமோசமாக இருந்த நெருக்கடியான காலத்தில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் சிறப்பாகவே இருந்தது. இப்பொழுது அரியாலை பூம்புகார் வரை வீதி ஓரளவுக்கு செப்பனிடப்பட்டுள்ளதோடு மிகுதிப் பகுதியை யாரும் கவனிப்பதாக இல்லை.

இப்பாடசாலையில் சுனாமி அனர்த்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட மாடிக்கட்டிடமும் உள்ளது. ஆனால் பத்து மாணவர்கள் மட்டுமே அங்கு கல்வி பயில்கின்றனர். அதிபர் அடிக்கடி இப்பாடசாலையை மூடிவிடுவோம் என்ற வார்த்தையைப் பிரயோகிப்பதால் இன்னும் உள்ள மாணவர்கள் விடுகைப்பத்திரங்களைப் பெற்று வேறு பாடசாலைகளுக்குச் செல்ல எத்தனிக்கின்றனர். போக்குவரத்து வசதிகள் இல்லாத வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்களின் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இப்பாடசாலை மூடப்படும் அபாயமான சூழலை அதிபர் உருவாக்கி வருவதும். சகல கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரிந்த விடயம். இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள தகுதியான ஆசிரியர்களும் தாம் வேறு இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதைத் தவிர வேறு வழிகள் இல்லாது இருக்கின்றனர். காரணம் ஆசிரியர்களையும் அதிபர் அடிக்கடி நீங்களும் சென்றுவிடுங்கள் என்றே கூறிவருகின்றார்.

இப்பாடசாலை மூடப்படுவதைத் தடுப்பது யார்? இப்பாடசாலையின் அபிவிருத்திக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி இதுவரை எவரும் சிந்திப்பதாக இல்லை.

வெவ்வேறு பிரதேசங்களில் பாடசாலைகள் திறக்கப்படும் நிலையில் 100 வருடங்களை எட்டும் நிலையில் உள்ள இப்பாடசாலையை மூடுவதற்கு எத்தனிப்பது கவலைதரும் விடயம்.

இவ்வாறு அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + six =

*