;
Athirady Tamil News

தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!

0

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு நடத்த சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து இந்தியா முழுவதும் 2017-18ம் ஆண்டு முதல் ‘நீட்’ நுழைவுத் தேர்வினை கட்டாயமாக்கி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.

தேசிய அளவில் தகுதியை நிர்ணயிக்கும் தேர்வு என்பதால் மாநில மொழிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து தமிழ், ஆங்கிலம், வங்காளம், மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, இந்தி, அசாமி ஆகிய 8 மொழிகளில் நீட் தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டது.

நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டுக்கும், மாநில வாரியான மருத்துவ ஒதுக்கீட்டுக்கும் தகுதி பெறுவார்கள் என்று வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய கல்வி நிறுவனமான சி.பி.எஸ்.இ., நீட் தேர்வுக்கான கேள்விகளைத் தயாரித்து நடத்தி வருகிறது.

கடந்த ஆண்டு முதல் முதலாக நீட் தேர்வு நடத்தப்பட்ட போது, அது கிராமப்புற மாணவர்களை பாதிப்பதாக அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தின. இந்த ஆண்டு நீட் தேர்வின் போதும் பல்வேறு குளறுபடிகள் காணப்பட்டன.

இந்த ஆண்டு தமிழில் நீட் தேர்வை சுமார் 24 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இந்த தேர்வில் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்கள் ஒவ்வொன்றில் இருந்தும் 45 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டது.

தவறான பதில் அளித்தால் 1 மதிப்பெண் குறைக்கப்படும் என்ற முறையும் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்வில் மொத்தம் உள்ள 180 கேள்விகளில் 49 கேள்விகள் தவறான தமிழ் மொழிபெயர்ப்புடன் கேட்கப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இந்த தவறான மொழி பெயர்ப்பு தமிழக மாணவர்களை பாதிக்கும் என்று கூறப்பட்டது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் எம்.பி. மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், நீட்தேர்வில் தமிழில் மொழி மாற்றம் செய்த வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன. எனவே அந்த வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு கடந்த 6-ந்தேதி நீதிபதிகள் சி.டி.செல்வம், பசீர் அகமது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.எஸ்.இ. சார்பில் ஆஜரான வக்கீல், பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாக யாரும் இந்த வழக்கு தொடரவில்லை. பொது நலன் வழக்காக மட்டுமே தொடரப்பட்டுள்ளது என்றார். அப்போது அவரிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினார்கள். அவர்கள் கூறியதாவது:-

நீங்கள் தவறாக கேள்வி கேட்பீர்கள். பின்னர் அது சரியென்று கூறுவீர்களா? சி.பி.எஸ்.இ. சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருகிறதா? தவறான கருத்துகளை சரியாக்க முயற்சிக்க வேண்டாம்.

“ராகத்திற்கு நகம் என்றும், இடைநிலை என்பதற்கு பதிலாக கடைநிலை என்றும், ரத்த நாளங்கள் என்பதற்கு பதிலாக ரத்தம் நலன்” என்றும் கேள்வித்தாளில் தவறு நடந்துள்ளது மிகவும் தெளிவாக தெரிகிறது.

பீகார் மாநிலத்தில் தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை எப்படி அதிகமானது. கருணை மதிப்பெண் கேட்டு வழக்கு தொடர்ந்த உடன் அவசர அவசரமாக தரவரிசை பட்டியல் வெளியிட்டது ஏன்?

இவ்வாறு நீங்கள் தவறு செய்தது தெளிவாக தெரிகிறது. இது தான் ஜனநாயகமா? இல்லை சர்வாதிகாரமா? தவறான கேள்விகள் இருக்கும் போது எப்படி சரியான பதிலை எதிர்பார்ப்பீர்கள். தமிழக மாணவர்கள் வாழ்நாள் கனவு தகர்ந்து போகாதா?

இவ்வாறு நீதிபதிகள் சி.பி. எஸ்.இ.க்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இரு தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு நீதிபதிகள் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதிகள் செல்வம், பசீர்முகமது வெளியிட்டனர். அதன் விவரம் வருமாறு:-

நீட் தேர்வு வினாத்தாளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்ததில் தவறு நடந்துள்ளது. தமிழ் வினாத்தாளில் கேட்கப்பட்ட 49 கேள்விகள் குளறுபடியாக உள்ளது தெளிவாகிறது.

இந்த தவறுக்கு சி.பி.எஸ்.இ.தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே குளறுபடியாக கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்ணை கருணை அடிப்படையில் தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு வழங்க வேண்டும். அந்த மதிப்பெண் அடிப்படையில் புதிய தரவரிசை பட்டியலை 2 வாரத்திற்குள் சி.பி.எஸ்.இ. வெளியிட வேண்டும்.
இதனை வைத்து மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 1 லட்சத்து 14 ஆயிரத்து 602 பேர் நீட் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 45 ஆயிரத்து 336 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் இதில் மொத்தம் 720 மதிப் பெண்களில் 691 மதிப்பெண்கள் எடுத்த பீகாரை சேர்ந்த கல்பனாகுமாரி தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்தார்.

அகில இந்திய அளவில் முதல் 50 இடங்களில் ஒரே ஒரு தமிழக மாணவி மட்டுமே இடம் பிடித்திருந்தார். தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் 49 தவறான கேள்வியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்தே தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்ணாக வழங்க ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. தர வரிசை பட்டியலையும் புதிதாக வெளியிட கூறியுள்ளது.

இது நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு முதல் 2 தடவை நீட் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பும் மாணவர் சமுதாயத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − nine =

*