;
Athirady Tamil News

அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக செயற்பட முடியாது: சி.வி..!! (வீடியோ)

0

நீதிமன்ற உத்தரவை ஏற்பதன் மூலம், அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக செயற்பட முடியாது என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 126ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதன்போது, டெனீஸ்வரனின் மேன்முறையீடு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வடக்கு மாகாண அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை சட்டத்திற்கு முரணானது எனத் தெரிவித்து பா.டெனீஸ்வரன் செய்திருந்த மேன்முறையீட்டை விசாரித்திருந்த நீதிமன்றம், அமைச்சர் குழாமின் அமைச்சர் ஒருவரை நியமிக்கவோ, பதவி விலக்கவோ மாகாண முதலமைச்சருக்கு முடியாது என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. அந்த அதிகாரம் ஆளுநருக்கே உண்டு எனக் கூறி டெனீஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சுப் பதவியில் நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இத்தீர்மானம் குழப்பத்தை விளைவித்துள்ளது. டெனீஸ்வரனை அமைச்சு பதவியில் நீடிக்க அனுமதித்தால் அமைச்சர் குழாம் ஆறாக மாறும். இது சட்டத்திற்குப் புறம்பானது. ஐந்திற்கு அதிகமான அமைச்சர்கள் இருந்தால் அது அரசியல் யாப்பு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணாக அமையும். ஆறுபேருடன் அமைச்சர் குழாம் செயற்பட்டால் அது அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரண்பட்டதாக ஆகிவிடும். சட்டவலுவற்றதாக அமையும். அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக செயற்படுவது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே அதற்கு முரணாக செயற்பட நாம் தயாரில்லை.

இதேவேளை, நீதிமன்றத் தீர்மானத்தின்படி முதலமைச்சரினால் அமைச்சர் ஒருவரை நியமிக்கவோ பதவி இறக்கவோ முடியாது. ஆகவே தற்போது எந்தவொரு அமைச்சரையும் பதவி இறக்க என்னால் முடியாது” என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்து வடக்கு முதல்வர் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை இழைத்துள்ளதாக தெரிவித்த டெனீஸ்வரனின் சட்டத்தரணி, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு பத்திரமொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − four =

*