;
Athirady Tamil News

52 ஆண்டுகால கனவு பலிக்குமா….. அரை இறுதியில் குரேஷியா சந்திக்கிறது இங்கிலாந்து..!!

0

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடக்கும் அரை இறுதியில் இங்கிலாந்து, குரேஷியா சந்திக்கின்றன. 52 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வெல்லும் வெறியோடு உள்ள இங்கிலாந்து, மிகவும் வலுவான நடுகள வீரர்களை கொண்ட குரேஷியா என்ற மிகப் பெரிய தடுப்பை தாண்ட வேண்டிய நிலையில் உள்ளது. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. கடந்த மாதம் 14ம் தேதி துவங்கிய இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்றன. முதல் சுற்று ஆட்டங்கள், நாக் அவுட் ஆட்டங்களைத் தொடர்ந்து காலிறுதி ஆட்டங்களும் முடிந்துள்ளன.

பிரான்ஸ், பெல்ஜியம், குரேஷியா, இங்கிலாந்து ஆகியவை அரை இறுதிக்கு நுழைந்துள்ளன. 1982 மற்றும் 2006க்குப் பிறகு ஐரோப்பாவைச் சேர்ந்த நான்கு அணிகள் அரை இறுதியில் விளையாடுகின்றன. தொடர்ந்து நான்காவது முறையாக ஐரோப்பிய நாடே கோப்பையை வெல்ல உள்ளது. 2006ல் இத்தாலி, 2010ல் ஸ்பெயின், 2014ல் ஜெர்மனி கோப்பையை வென்றன. அரை இறுதியில் விளையாடும் பிரான்ஸ் 1998ல் கோப்பையை வென்றது. இங்கிலாந்து 1966ல் கோப்பையை வென்றுள்ளது. மற்ற இரு அணிகளும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முயற்சியில் உள்ளன.

நேற்று இரவு நடந்த முதல் அரை இறுதியில் பிரான்ஸ் 1-0 என பெல்ஜியத்தை வென்றது. இன்று இரவு 11.30 மணிக்கு மாஸ்கோவில் நடைபெறும் இரண்டாவது அரை இறுதியில் இங்கிலாந்து, குரேஷியா மோத உள்ளன. குரேஷியா கடந்து வந்த பாதை இந்த உலகக் கோப்பையில் டி பிரிவில் இடம்பெற்றிருந்த குரேஷியா அனைத்து ஆட்டங்களிலும் வென்றுள்ளது. லீக் சுற்றில் நைஜீரியாவை 2-0, அர்ஜென்டினாவை 3-0, ஐஸ்லாந்தை 2-1 என வென்றது. நாக் அவுட்டில் டென்மார்க்கை 3-2 என பெனால்டி ஷூட்அவுட்டில் வென்றது. காலிறுதியில் ரஷ்யாவை 4-3 என பெனால்டிஷூட்டில் வென்றது.

நான்காவது முறையாக உலகக் கோப்பையில் களமிறங்கியுள்ள குரேஷியா, 2வது முறையாக அரை இறுதியில் விளையாடுகிறது. இங்கிலாந்து கடந்த வந்த பாதை இந்த உலகக் கோப்பையில் ஜி பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து, லீக் சுற்றில் 3ல் 2 வெற்றி, ஒரு தோல்வியைப் பெற்றது. துனீஷியாவை 2-1, பனாமாவை 6-1 என்று வென்ற இங்கிலாந்து, கடைசி ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 1-0 என தோல்வியடைந்தது. நாக் அவுட் சுற்றில் 4-3 என பெனால்டி ஷூட்அவுட்டில் கொலம்பியாவை வென்றது.

கால் இறுதியில் ஸ்வீடனை 2-0 என வென்றது. சமாளிக்குமா இங்கிலாந்து ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் லுகா மோட்ரிக், பார்சிலோனாவுக்காக விளையாடும் இவான் ராகிடிக் தற்போது உலகின் மிகச் சிறந்த நடுகள வீரர்கள். இவர்கள் இருவரும் இணைந்திருப்பது குரேஷியாவுக்கு மிகப் பெரிய பலம். இவர்களைத் தவிர அணியில் உள்ள 11 வீரர்கள் குறைந்தபட்சம் 40 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி இதுவரை பெரிதாக எந்த சவாலையும் சந்திக்கவில்லை. முதல் முறையாக சந்திக்க உள்ளது.

சாதிக்குமா குரேஷியா இந்த உலகக் கோப்பையில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியடையாத அணி என்ற கெத்துடன் அரை இறுதியில் விளையாடுகிறது குரேஷியா. முதல் முறையாக அரை இறுதியில் விளையாடினாலும், அனுபவமிக்க முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவை 3-0 என லீக் ஆட்டத்தில் வென்றதன் மூலம் தனது முத்திரையை பதித்துள்ளது. கோப்பையை வெல்லக் கூடிய அணி என்று பெயர் எடுத்தாலும், முக்கிய ஆட்டங்களில் இங்கிலாந்து பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்த உலகக் கோப்பையில் அதிக கோலடித்தோர் பட்டியலில் 6 கோல்களுடன் உள்ள ஹாரி கேன் ஏதாவது மேஜிக் செய்தால், மற்றும் குரேஷியா சொதப்பினால், பைனல் நுழைவதற்கு இங்கிலாந்துக்கு வாய்ப்பு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − three =

*