457 தொண்டர் ஆசிரியர்களுக்கு -யாழ்ப்பாணத்தில் நியமனம்..!!

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 457 தொண்டர் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிஸ்ணன் தெரிவித்தார்.
எக்காரணம் கொண்டும் இனிமேல் பாடசாலைகளில் தொண்டராசிரியர்களாக எவரும் இணைத்துக்கொள்ளப்படமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்குவது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் இவ்வாறு தெரிவித்தார் என்று அவரது ஊடகப் பிரிவு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வடக்கில் நீண்ட நாள்களாகப் பிரச்சினையாக இருந்த தொண்டர் ஆசிரியர் நியமனத்துக்குத் தீர்வாக இரண்டாம் கட்டமாக 457 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. எதிர்வரும் 22ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்லும் தலைமை அமைச்சர் ரனில்விக்கரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்படும்.
தொண்டர் ஆசிரியர்கள் நியமனத்தில் முதற் கட்டமாக 182 பேருக்கு அன்மையில் நியமனங்கள் வழங்கி வைக்கபட்டன. தற்போது இரண்டாம் கட்டமாக 457 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இவர்களில் 6 பேர் தேசியப் பாடசாலைகளுக்கும் 451 பேர் மாகாணப் பாடசாலைகளுக்கும் நியமிக்கப்படவுள்ளனர்.
நியமனம் பெறுபவர்களில் தீவக பகுதிகளுக்கு 40 பேரும், யாழ்ப்பாணக் கல்வி வலயத்துக்கு 29 பேரும் கிளிநொச்சி கல்வி வலயத்துக்கு 142 பேரும் மடு கல்வி வலயத்துக்கு 4 பேரும் மன்னார் கல்வி வலயத்துக்கு 14 பேரும் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு 59 பேரும் தென்மராட்சி கல்வி வலயத்துக்கு 10 பேரும் துணுக்காய் கல்வி வலயத்துக்கு 21 பேரும் வடமராட்சி கல்வி வலயத்துக்கு 34 பேரும் வலிகாமம் கல்வி வலயத்துக்கு 39 பேரும் வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்கு 16 பேரும் வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்கு 49 பேரும் அனுப்பப்படவுள்ளனர்.
இனிமேல் எக்காரணம் கொண்டும் தொண்டர் ஆசிரியர்கள் சேவைக்கு இணைத்துக் கொள்ளமாட்டார்கள் -என்றுள்ளது.