அமைச்சர்களை நீக்குவதற்கு – விக்னேஸ்வரனுக்கு அதிகாரமில்லையாம்..!!

டெனீஸ்வரன் வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவின் அடிப்படையில் வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் தற்போது தன்னிடம் இல்லை என்று தெரிவித்திருக்கும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தற்போது எழுந்துள்ள குழப்ப நிலைக்கு உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை எதிர்பார்த்திருக்கின்றோம் என்கிறார்.
வடக்கு மாகாண சபையில், டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பில் நேற்று எழுப்பப்பட்ட சிறப்புரிமை பிரச்சினை மீதான விவாதத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது: ஒழுங்குப் பிரச்சனை ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. அது நாம் எதிர்பார்த்ததுதான். மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானம் பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அதன் நிமித்தம் இந்த சபைக்கு சுருக்கமான ஒரு விளக்கத்தை அளிக்கவேண்டிய கடப்பாடு எனக்குள்ளது.
உயர் நீதிமன்றத்தின்முன் மேன்முறையீட்டுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் தீர்மானத்தில் மேன்முறையிட்டு நீதிமன்றம் எந்த ஒரு மாகாண முதலமைச்சர் தானும் தமது அமைச்சர் குழாமின் அமைச்சர் ஒருவரை நியமிக்கவோ, பதவி இறக்கவோ முடியாது என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.
அந்த அதிகாரம் ஆளுநருக்கே உண்டு எனக் கூறி டெனீஸ்வரனின் பதவி இறக்கத்தை ஆளுநர் உத்தியோகபூர்வமாக அரசிதழில் பிரசுரிக்காத காரணத்தினாலோ என்னவோ டெனீஸ்வரன் தொடர்ந்து பதவியில் இருக்கின்றார் என்று தீர்மானித்துள்ளார்கள்.
முரண்நிலை
ஆனால் இந்தத் தீர்மானம் குழப்பத்தை விளைவித்துள்ளது. டெனீஸ்வரனைச் சேர்த்தால் அமைச்சர் குழாம் ஆறாக மாறும். இது சட்டத்துக்குப் புறம்பானது. ஐந்துக்குக்கூட அமைச்சர்கள் இருந்தால் அது சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணாக அமையும்.
ஆறு பேருடன் அமைச்சர் குழாம் செயற்பட்டால் அது அரசமைப்பின் ஏற்பாடுகளுக்கு முரண்பட்டதாக ஆகிவிடும். சட்டவலுவற்றதாக அமையும். அரசமைப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக செயற்படுவது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். அரசமைப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக நடந்து கொள்ள நாங்கள் தயாரில்லை.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் எம்மால் இயைந்து அரசமைப்பின் ஏற்பாடுகளை மீற முடியாது. ஆகவேதான் நாங்கள் இதுபற்றிய உயர் நீதிமன்ற தீர்மானத்தை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
சட்டப்பிரச்சினை
இந்த வழக்கில் மிகவும் முக்கியமான சட்டப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவற்றை ஆராய்ந்து ஒரு முடிவை எடுக்கக் கூடியவர்கள் உயர் நீதிமன்ற நீதியரசர்களே. உண்மையில் அவர்களுக்கு மட்டுமே இந்த அதிகாரம் அரசமைப்பின் 125ஆம் இலக்க ஏற்பாட்டால் வழங்கப்பட்டுள்ளது.
எமது நிலைப்பாடு மாகாண அமைச்சர் குழாமில் உள்ள அமைச்சர்களை நியமிக்கும் மற்றும் பதவி இறக்குவதைத் தீர்மானிப்பது அந்தந்த மாகாணங்களின் முதலமைச்சர்களையே சார்ந்ததாகும் என்பதே.
அரசமைப்பின் 154 எப்(5)இன் ஏற்பாடுகள் பின்வருமாறு அமைந்துள்ளது,
‘‘மாகாணமொன்றின் சார்பாக அமைக்கப்பெறும் மாகாணசபையொன்றின் மற்றைய அமைச்சர்கள், சபை உறுப்பினர்களின் மத்தியில் இருந்து முதலமைச்சரின் பரிந்துரையின் பெயரில் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள்’’. இந்த உறுப்புரை அமைச்சர்களை எவ்வாறு பதவி நீக்கம் செய்யலாம் என்பது பற்றி எதுவும் கூறவில்லை.
உயர்நீதிமன்றத்தை எதிர்பார்பார்த்திருக்கின்றோம்
மேற்படி உறுப்புரையின் ஏற்பாடுகளைக் கவனித்தீர்களானால் ஆளுநர் தானாக அமைச்சர் ஒருவரை நியமிக்க முடியாது. முதலமைச்சரின் பரிந்துரையின் பெயராலேயே அவர் எவரையாவது அமைச்சராக நியமிக்க முடியும். இது சம்பந்தமாகத் தானாக அவர் இயங்க முடியாது. தற்போதுள்ள நிலையில் ஐந்துக்கு மேற்பட்ட அமைச்சர்கள் பதவி வகித்தால் அது சட்டத்திற்குப் புறம்பாகும். எமது நடவடிக்கைகள் சட்ட வலுவற்றதாக மாறிவிடுவன. ஆகவே தான் நாங்கள் உயர் நீதிமன்ற தீரமானத்தை எதிர்பார்த்துள்ளோம்.
இதில் பல சிக்கல்கள் உள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானப்படி முதலமைச்சர் அமைச்சர் ஒருவரை நியமிக்கவோ பதவி இறக்கவோ முடியாது. ஆகவே தற்போது எந்த ஒரு அமைச்சரையும் பதவி இறக்க என்னால் முடியாது. முன்னர் எனது பரிந்துரைக்கு அமைய தொடர் நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருந்தது. முதலமைச்சர் என்ற கடமையில் இருந்து நான் தவறவில்லை. என் வரையறைக்குள் இருந்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை நான் எடுத்துள்ளேன். அரசிதழில் பிரசுரிப்பது போன்றவை எனது வரையறைக்கு அப்பாற்பட்டன.
அதிகாரப் பகிர்வுக்கு என்ன நடந்தது?
ஆளுநருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் இருக்கின்றதென்றால் அதிகாரப் பகிர்வுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழும். நேரடியாகக் கொழும்பு அரசு மாகாண அமைச்சர்களை நியமித்து ஒற்றையாட்சியை நடத்த முடியுமென்றாகின்றது. இவ்வாறான ஒற்றையாட்சியையும் ஆளுநரின் சர்வாதிகாரத்தையுந்தான் எம்மவர்கள் எதிர்பார்க்கின்றார்களோ எனக்குத் தெரியாது.
தெற்கில் உள்ள மாகாண சபைகளையும் இவ்வாறான தீர்மானங்கள் பாதிக்கின்றன. அதிகாரப் பரவலாக்கம் பதின்மூன்றாந் திருத்தச் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டதா இல்லையா என்ற அரசமைப்புச் சம்பந்தமான விடயத்தையும் உயர் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்.
ஒரு சில நாள்களுள் உயர் நீதிமன்றம் எமது மேன்முறையீட்டின் காரணமாகத் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியிருக்கும். இவை எனது சொந்தக் கருத்துக்களே. வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் நடவடிக்கையில் இருப்பதால் நீதிமன்றத் தீர்மானங்களைப் பற்றி இந்தச் சபையில் விவாதம் நடத்துவது முறையாகாது என்பதைச் சொல்லி வைக்கின்றேன் – என்றார்.