;
Athirady Tamil News

பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – பாக். தலீபான் அமைப்பு பொறுப்பு ஏற்றது..!!

0

பயங்கரவாதிகளின் சொர்க்க புரியாக திகழ்கிற பாகிஸ்தானில் வருகிற 25-ந் தேதி நாடாளுமன்றத்துக்கும், சில மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் பிரசாரத்தின்போது பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான், அவாமி தேசிய கட்சி தலைவர்கள் உள்பட 6 அரசியல் தலைவர்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அந்த நாட்டின் தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் நேற்று முன்தினம் காலை எச்சரிக்கை விடுத்தது.

இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்துக்கும், மாகாண உள்துறை அமைச்சகங்களுக்கும் 12 பயங்கரவாத உஷார் குறிப்புகளை அனுப்பி உள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்தது.

இந்த நிலையில், கைபர் பக்துங்வா மாகாண சட்டசபை தேர்தலில், பி.கே.- 78 (பெஷாவர்) தொகுதியில் களம் இறங்கிய அவாமி தேசிய கட்சியின் மூத்த தலைவர் ஹாரூண் பிலோர், பெஷாவர் நகரில் யாகாடூட் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி அவர் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்தபோது, தற்கொலைப்படையை சேர்ந்த இளம் பயங்கரவாதி ஒருவர் உடலில் வெடிகுண்டுகளை கட்டி எடுத்து வந்து, பிரதான நுழைவாயிலில் வைத்து வெடிக்க வைத்தார். பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்துச் சிதறின. உடனே கூட்டத்தினர் பதற்றத்தில் நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர்.

இருப்பினும் இந்த குண்டுவெடிப்பில் ஹாரூண் பிலோர் உள்ளிட்டோர் சிக்கி ரத்த வெள்ளத்தில் வீழ்ந்தனர். 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிய நிலையில் உயிரிழந்தனர்.

உடனடியாக பாதுகாப்பு படையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

ஹாரூண் பிலோரும் மீட்கப்பட்டு, உடனடியாக ஆம்புலன்சில் லேடி ரீடிங் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சுமார் 50 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை தரப்பட்டது.

இருப்பினும் ஆஸ்பத்திரியில் ஹாரூண் பிலோர் உள்ளிட்ட 7 பேர் இறந்து விட்டதால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே லேடி ரீடிங் ஆஸ்பத்திரி செய்தி தொடர்பாளர் ஜூல்பிகர் அலி பாபா கேல் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒரு சிறுமி உள்பட 6 பேரது உடல்நிலை கவலைக்கிடம் அளிக்கும் வகையில் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

இந்த குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்த ஒருவர் மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த தாக்குதல் பற்றி பெஷாவர் கூடுதல் போலீஸ் ஐ.ஜி. ஷாப்கத் மாலிக் கூறும்போது, “முதல்கட்ட விசாரணையில் இந்த தற்கொலைப்படை தாக்குதல், அவாமி தேசிய கட்சியின் மூத்த தலைவர் ஹாரூண் பிலோரை குறிவைத்துத்தான் நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது” என குறிப்பிட்டார்.

உயிரிழந்த ஹாரூண் பிலோர் உடல், அவரது இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு நேற்று அவாமி தேசிய கட்சி தொண்டர்கள் திரளாக திரண்டு வந்து மறைந்த தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் மாலை 5 மணிக்கு வாஜிர் பாக்கில் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலீபான் அமைப்பு பொறுப்பு ஏற்றது.

ஹாரூண் பிலோர் படுகொலையை தொடர்ந்து பி.கே.- 78 தொகுதி தேர்தலை தேர்தல் கமிஷன் ஒத்திவைத்தது. தேர்தல் பிரசார கூட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலைமை தேர்தல் ஆணையர் சர்தார் முகமது ராசா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் “இந்த தாக்குதல் பாதுகாப்பு அமைப்புகளின் பலவீனத்தையும், வெளிப்படையான தேர்தலுக்கு எதிரான சதியையும் காட்டுகிறது” என்றார். அவாமி தேசிய கட்சி, தலீபான் பயங்கரவாத அமைப்புக்கு எதிரானது ஆகும்.

படுகொலை செய்யப்பட்ட ஹாரூண் பிலோரின் தந்தை பஷீர் பிலோர் 2012-ம் ஆண்டு பாகிஸ்தான் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + thirteen =

*