;
Athirady Tamil News

இங்கிலாந்தை 2-1 என வென்றது…. முதல் முறையாக பைனல் நுழைந்தது…. கலக்கியது குரேஷியா..!! (வீடியோ)

0

52 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை வெல்லும் கனவோடு களமிறங்கியுள்ள இங்கிலாந்தை அரை இறுதியில் 2-1 என வென்றது குரேஷியா. இதன் மூலம் குரேஷியா முதல் முறையாக பைனல் நுழைந்துள்ளது. வரும் 15ம் தேதி நடக்கும் பைனலில் பிரான்ஸை சந்திக்கிறது. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. கடந்த மாதம் 14ம் தேதி துவங்கிய இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்றன.

முதல் சுற்று ஆட்டங்கள், நாக் அவுட் ஆட்டங்களைத் தொடர்ந்து காலிறுதி ஆட்டங்களும் முடிந்துள்ளன. பிரான்ஸ், பெல்ஜியம், குரேஷியா, இங்கிலாந்து ஆகியவை அரை இறுதிக்கு நுழைந்தன. 1982 மற்றும் 2006க்குப் பிறகு ஐரோப்பாவைச் சேர்ந்த நான்கு அணிகள் அரை இறுதியில் விளையாடுகின்றன. தொடர்ந்து நான்காவது முறையாக ஐரோப்பிய நாடே கோப்பையை வெல்ல உள்ளது. 2006ல் இத்தாலி, 2010ல் ஸ்பெயின், 2014ல் ஜெர்மனி கோப்பையை வென்றன. அரை இறுதியில் விளையாடிய பிரான்ஸ் 1998ல் கோப்பையை வென்றது. இங்கிலாந்து 1966ல் கோப்பையை வென்றது.

மற்ற இரு அணிகளும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முயற்சியில் உள்ளன. முதல் அரை இறுதியில் பிரான்ஸ் 1-0 என பெல்ஜியத்தை வென்றது. இன்று நடந்த இரண்டாவது அரை இறுதியில் குரேஷியா 2-1 என இங்கிலாந்தை வென்றது. குரேஷியா கடந்து வந்த பாதை இந்த உலகக் கோப்பையில் டி பிரிவில் இடம்பெற்றிருந்த குரேஷியா அனைத்து ஆட்டங்களிலும் வென்றுள்ளது. லீக் சுற்றில் நைஜீரியாவை 2-0, அர்ஜென்டினாவை 3-0, ஐஸ்லாந்தை 2-1 என வென்றது. நாக் அவுட்டில் டென்மார்க்கை 3-2 என பெனால்டி ஷூட்அவுட்டில் வென்றது. காலிறுதியில் ரஷ்யாவை 4-3 என பெனால்டிஷூட்டில் வென்றது. நான்காவது முறையாக உலகக் கோப்பையில் களமிறங்கியுள்ள குரேஷியா, 2வது முறையாக அரை இறுதியில் விளையாடியது.

இங்கிலாந்து கடந்த வந்த பாதை இந்த உலகக் கோப்பையில் ஜி பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து, லீக் சுற்றில் 3ல் 2 வெற்றி, ஒரு தோல்வியைப் பெற்றது. துனீஷியாவை 2-1, பனாமாவை 6-1 என்று வென்ற இங்கிலாந்து, கடைசி ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 1-0 என தோல்வியடைந்தது. நாக் அவுட் சுற்றில் 4-3 என பெனால்டி ஷூட்அவுட்டில் கொலம்பியாவை வென்றது. கால் இறுதியில் ஸ்வீடனை 2-0 என வென்றது. முதல் கோல் அடித்தது 52 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை வெல்லும் வெறியோடு களமிறங்கிய இங்கிலாந்து அணி, இன்று நடந்த அரை இறுதியில் குரேஷியாவை சந்தித்தது. ஆட்டத்தின் 5வது நிமிடத்திலேயே இங்கிலாந்தின் டிரிப்பர் அபாரமாக கோலடித்தார்.

முதல் பாதியின் இறுதியில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது. ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் பெரிசிக் கோலடிக்க குரேஷியா 1-1 என சமநிலையை உருவாக்கினார். ஆட்ட நேர இறுதியில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன. அதையடுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இங்கிலாந்து நொறுங்கியது கூடுதல் நேரத்தின் முதல் பாதியிலும் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. 109வது நிமிடத்தில் மன்ட்சுகிக் கோலடிக்க 2-1 என குரேஷியா முன்னிலை பெற்றது.

துவக்கத்திலேயே இங்கிலாந்து கோலடித்தாலும், அதன்பிறகு, அதற்கு கோலடிக்கும் வாய்ப்பைத் தராமல், அதே நேரத்தில் இரண்டு கோல்களை அடித்து அசத்தியது குரேஷியா. மிகவும் வலுவான நடுகள வீரர்களை கொண்டுள்ளது குரேஷியாவுக்கு மிகப் பெரிய சாதகமானது. கூடுதல் நேரத்தின் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வென்றது குரேஷியா. முதல் முறையாக பைனல் நுழைந்துள்ள குரேஷியா, அதில் பிரான்ஸை சந்திக்க உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 4 =

*