;
Athirady Tamil News

மாவட்டச் செயலகங்கள் மூலம் மாகாண அரசின் அதிகாரங்களை மத்தி கட்டுப்படுத்தி வருகிறது..!!

0

1992ம் ஆண்டின் 58வது இலக்க சட்டமே மாவட்டச் செயலர்களையும் கிராம சேவகர்களையும் மேலும் சிலரையும் எம் கட்டுப்பாட்டுக்குள் இருந்து மத்தியின் கட்டுப்பாட்டுக்குள் இழுத்தது. குறித்த சட்டம் வாபஸ் பெற்று, அச் சட்டம் வர முன்னிருந்த நிலை கொண்டுவரப்பட வேண்டும். இன்று சமாந்தர நிர்வாகங்கள் நடைபெறுகின்றன. மாகாணசபையால் ஒன்று. மத்தியால் இன்னொன்று. அதையும் விட அண்மைக் காலத்தில் ஆளுநரின் ஆட்சியும் மூன்றாம் நிர்வாகமாகத் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. இவை அனைத்திலும் பாதிக்கப்படுவது மக்களே என வட மாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

இன்றைய தினம்(12) கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்திற்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அலுவலகக் கட்டடத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்துஉரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

மாற்றுவலுவுள்ளோருக்கான ஒரு அலுவலகத்தின் அவசியத்தை உணர்ந்த எமது வடமாகாணசபையின் கௌரவ உறுப்பினர்களான திரு. சு.பசுபதிப்பிள்ளை, திரு.வை.தவநாதன், திரு. ப.அரியரட்ணம் ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட இவ் அலுவலகம் எதிர்காலத்தில் சிறப்புடன் செயற்பட்டு மாற்றுவலுவுள்ளோரின் மேம்பாட்டிற்கு உதவ அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என எதிர்பார்க்கின்றேன்.

எமது கௌரவ உறுப்பினர்கள் சேர்ந்து வேலை செய்தால், ஒத்துழைத்தால், ஒருமித்து சிந்தித்தால் எவ்வாறான சமூக சீர்திருத்தங்களை நாங்கள் உண்டுபண்ணலாம் என்பதற்கு எமது கௌரவ உறுப்பினர்கள் மூவரும் எடுத்துக்காட்டு. கட்சியால் வேறுபட்டாலும் தமது மக்களின் மேம்பாட்டுக்கு உழைக்க முன்வந்த எமது உறுப்பினர்கள் மூவருக்கும் எமது பாராட்டுக்கள் உரித்தாகுக!

மாற்றுவலுவுள்ள குழந்தைகள், யாரும் தேடப்படாதவர்களாக எங்கோ ஒரு மூலையில் இருந்து வெளி உலகிற்குத் தெரியாதவர்களாக வளர்ந்து அவர்களுடைய வாழ்க்கையை முடித்துக் கொண்ட பழைய நிலைமை இன்று இல்லை. தற்போது மாற்றுவலுவுள்ளவர்கள் என்ற கௌரவத்துடன் மக்கள் மத்தியில் ஏனைய மக்களுக்கு இவர்கள் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்ற ஒரு உறுதிப்பாட்டுடன் தாமே தமது கால்களில் நிலையாக நிற்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

மாற்றுத் திறனாளிகளைப் பார்த்து சாதாரண மக்கள் கழிவிரக்கம் கொண்ட நிலை மாற்றப்பட்டு இப்போது மாற்றுத் திறனாளிகளின் திறமைகளை ஏனையவர்கள் வியந்து நோக்குகின்ற தன்மைக்கு இவர்களின் வாழ்க்கை முறைமைகள் மாற்றப்பட்டுள்ளன.
நான் அரசியலுக்கு வரமுன் ஒரு இளைஞர் என்னைப் பார்க்க வந்தார். அவரின் உடலின் குறைபாடுகள் தெற்றெனத் தெரிந்தன.

கைவிரல்கள் வளைந்து முடமாகி இருந்தன. அவர் வேலைகேட்டு வந்திருந்தார். நான் சற்று பதற்றத்துடன் ‘உங்களுக்கு என்ன வேலை தெரியும்?’ என்று கேட்டேன். கணனியில் தன்னால் எந்த வேலையும் செய்ய முடியும் என்று கூறினார். நான் மலைத்துப் போனதை அவர் அவதானித்திருக்க வேண்டும். ‘சேர்! என்னுடைய தோற்றத்தைப் பார்த்து எடை போடாதீர்கள். வேலையைத் தந்து பாருங்கள். உங்கள் அனுதாபத்தின் பேரில் எனக்கு வேலை வேண்டாம்.

எனக்கு தகைமை இருக்கின்றது என்று கண்டால் ஒரு வேலை வாங்கித் தாருங்கள்’ என்றார். அவர் கூறியவாறே அவருக்குத் தகைமைகள் தாராளமாகவே இருந்தன. ‘எங்கள் மீது அனுதாபம் கொள்ளாதீர்கள்.
நாங்கள் பிறந்தது இவ்வாறே. நாம் இப்பொழுது இருப்பது போல் எம்மை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று அந்த இளைஞன் கூறியது என் காதுகளில் இப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. வேலை கொடுநரின் மனங்குளிருமளவுக்கு தற்போது அவர் ஒரு வேலையில் பணியாற்றுகின்றார். எனவே இன்று நாங்கள் மாற்றுத் திறனாளிகளை ஏற்று நடக்கப் பழகியுள்ளோம்.

இவ்வாறான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்குக் கடுமையாக உழைத்த அனைத்து நல் உள்ளங்களையும் இத் தருணத்தில் நன்றியுடன் நினைவுகூருவது பொருத்தமானது என எண்ணுகின்றேன்.

தற்போது மாற்றுத்திறனாளிகளின் உயர்வுக்காக வேண்டி பலதரப்பட்ட சமூக அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், மத அமைப்புக்கள் சார்ந்த நிலையங்கள் அத்துடன் பொருள் படைத்த தனவந்தவர்களும் முன்வந்திருப்பது இவர்களின் வளர்ச்சிக்கான அடித்தளமாக கொள்ளப்படலாம். மாற்றுத் திறனாளிகளின் வளர்ச்சிக்கு உதாரணமாக நான் பல இடங்களிலும் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டுவதுண்டு. யாழ்ப்பாணத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஒரு விழிப்புலனற்றோர் சங்கத்தின் வருடாந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. அந்த நிகழ்வில் அதன் தலைவர் எடுத்துக்கூறிய ஒரு விடயம் என்னை மிகவும் கவர்ந்;தது.

அதாவது யாழ்ப்பாணத்தில் அல்லது வடபகுதியில் விழிப்புலனற்ற எந்தவொரு தனிநபரும் கைநீட்டி யாசகம் பெறும் நிலை காணப்படக்கூடாது எனவும் தற்செயலாக யாராவது ஒரு விழிப்புலனற்றவர் தமது வாழ்வாதாரத்திற்கான பொருட்களோ, ஊதியங்களோ கிடைக்கப்பெறாத நிலையில் அவர்கள் உணவுக்காக கஸ்டப்படுகின்ற நிலை ஏற்பட்டால் அது பற்றி தமது சங்கத்திற்கு உடனடியாக அறியத்தரப்பட வேண்டும் எனவும் அவ்வாறான சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட நபருக்கு உதவிகளை வழங்குவதற்குத் தமது சங்கம் தயாராக உள்ளதாகவுந் தெரிவித்திருந்தார். அந்தத் தலைவர் கண்பார்வையற்றவர். அப்படி இருந்தும் சட்டத்தரணியாக அவர் சித்தியடைந்து வழக்குகளிலும் தெரிபடுபவர் என்று அறிந்து கொண்டேன்.

அன்று அவர் எமது மாற்றுவலுவுள்ளவர்கள் யாசகம் பெறக் கூடாது என்று கூறியமை உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய விடயம். மாற்றுவலுவுள்ளவர்கள் தமது வலுவின்மையை மட்டும் சிந்தித்துத் தம்மைத்தாமே தாழ்த்திக் கொண்டு வாழ்ந்திருக்காது தமது வலுவின்மையை அவர்களுக்கிருக்கக்கூடிய மனவலிமையினால் தோற்கடிக்கச் செய்து வாழ்வில் முன்னேறக்கூடிய நிலைமை இன்று உருவாக்கப்பட்டுள்ளது. மாற்றுவலுவுள்ளவர்கள் நாம் கற்பனையில் கூட சிந்திக்கமுடியாத அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்கள். பார்வை இழந்த இளைஞர்கள் துடுப்பாட்ட போட்டிகளில் ஈடுபடுகின்றார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பான பெறுபேறுகளை பெற்றுக் கொள்கின்றார்கள்.

தமது அறிவு அல்லது புத்திக்கூர்மையின் ஊடாக அவர்களால் புரியக்கூடியதும் வருவாய் ஈட்டக்கூடியதுமான தொழில் முயற்சிகளை தெரிவு செய்து அவற்றில் முனைப்புடன் ஈடுபட்டு இன்று பல மாற்றுத்திறனாளிகள் தனவந்தர்களாக சமூகத்தின் மதிப்பார்ந்தவர்களாக வாழ்ந்துவருவதை அவதானித்து மனநிறைவு கொள்கின்றோம்.
மாற்றுத் திறனாளிகள் எனப்படுபவர்கள் ஒரு புலனங்கத்தின் செயற்பாடுகள் குன்றியதால் ஏனைய புலன்களின் செயற்பாடுகளில் அதீத வளர்ச்சியை அடைந்தவர்கள் என்று கூறுவார்கள்;.

இன்று கண்பார்வை இழந்த பலர் பாடகர்களாக, இசைக்கருவிகளை சிறந்த முறையில் கையாள்பவர்களாக, சிறந்த இசையமைப்பாளர்களாக இலங்கையிலும் தென்னிந்திய இசைத் துறையிலும் பிரகாசித்துக் கொண்டிருப்பது எமக்குப் பெருமை சேர்க்கின்றது.

இன்றைய இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்த போது பல்வேறுபட்ட காரியாலய கடமைகளில் மூழ்கியிருந்தேன். ஆனால் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொண்டு இவர்களை மென்மேலும் முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்வதற்கு நாமும் ஒரு உந்துகோலாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே இந்த நிகழ்வில் கலந்து கொள்ளச் சம்மதித்தேன். அத்துடன் இன்றைய இந்த அலுவலக் கட்டடம் எமது சக உறுப்பினர்களின் ஒன்றுபட்ட செயலினால் உருவாகியதொன்று என்பதும் என்னை இங்கு அழைத்து வந்தது.

இங்கு வந்ததும் நான் உணர்ந்து கொண்டது மாற்றுத் திறனாளிகள் இரண்டு வகைப்பட்டவர்கள் என்பதை. பிறவியில் மாற்றுத்திறனாளிகளாகப் பிறப்பவர்கள், போரின் நிமித்தம், விபத்துக்கள் நிமித்தம் மாற்றுத்திறனாளிகளாக ஆக்கப்படுபவர்கள். நான் பொதுவாக மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கப்படுபவர்கள் பற்றியே இங்கு கூறினேன். உங்களுள் பலர் போரினால் மாற்றுத்திறனாளிகளாக ஆக்கப்பட்டவர்கள். உங்களைப் பராமரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. ஆனால் கட்சிகள், இயக்கங்களின் பெயர்களைச் சொல்லி நீங்கள் புறக்கணிக்கப்படுவதை நான் உணர்ந்து கொண்டேன். உங்கள் தேவைகளை எழுத்தில் தாருங்கள். நிதிகளுக்கு ஏற்றவாறு உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வோம் என்று கூறிவைக்கின்றேன்.

வடமாகாணசபை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை கையேற்ற தினத்தில் இருந்து இன்று வரை எமது மாகாண முன்னேற்றத்திற்காக கூடுதலான நிதிகளை அரசாங்கம் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கூறி வருகின்றோம். இப்பகுதியில் உள்ள வீடு இழந்தவர்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும், வாழ்வாதாரங்களை, தொழில் முயற்சிகளை இழந்தவர்களுக்கு உரிய உதவிகளை வழங்கி மீண்டும் அவர்களை அடிப்படை நிலைக்காவது கொண்டுவரவேண்டும் என்ற எண்ணத்தில் நாம் தொடர்ந்தும் பல்வேறு கோரிக்கைகளை மேற்கொள்ளுகின்ற போதும் அரசு எமது கோரிக்கைகளை கண்டுகொள்வதாக இல்லை. மாறாக மத்திய அரசின் அமைச்சர்களின் நிதி ஒதுக்கீடுகளைக் கூட்டி அவர்களுக்கு ஊடாக எமக்கு உதவிகளை வழங்க எத்தனிக்கின்றார்கள். அதற்கு மாவட்டச் செயலகங்களைப் பாவிக்கின்றார்கள். ஆனால் வேலைகளை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் மாகாண சபையால் சம்பளம் கொடுக்கப்படுகின்ற எமது அலுவலர்களே. இந்த நிலை மாற வேண்டும்.

1992ம் ஆண்டின் 58வது இலக்க சட்டமே மாவட்டச் செயலர்களையும் கிராம சேவகர்களையும் மேலும் சிலரையும் எம் கட்டுப்பாட்டுக்குள் இருந்து மத்தியின் கட்டுப்பாட்டுக்குள் இழுத்தது. குறித்த சட்டம் வாபஸ் பெற்று, அச் சட்டம் வர முன்னிருந்த நிலை கொண்டுவரப்பட வேண்டும். இன்று சமாந்தர நிர்வாகங்கள் நடைபெறுகின்றன. மாகாணசபையால் ஒன்று. மத்தியால் இன்னொன்று. அதையும் விட அண்மைக் காலத்தில் ஆளுநரின் ஆட்சியும் மூன்றாம் நிர்வாகமாகத் தலை தூக்கத் தொடங்கியுள்ளது.

இவை அனைத்திலும் பாதிக்கப்படுவது மக்களே.
அதிகாரப் பகிர்வு என்று பேச்சுக்குப் பேச்சு அரசாங்கங்கள் கூறிவந்தாலும் மத்தியின் அதிகாரங்களைப் பகிர அரசாங்கத்தினர் முன் வருகின்றார்கள் இல்லை. அதனால்த்தான் நாங்கள் எங்களை நாங்களே பார்த்துக்கொள்ள, எம் மக்களை நாங்களே சிறப்பாக வழிநடத்த சமஷ;டி முறையிலான ஒரு அரசியல் யாப்பைக் கோரி வருகின்றோம். ஆனால் சமஷ;டி பிரிவினைக்கு அடிகோலும் என்ற தப்பபிப்பிராயம் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்டுள்ளதால் உண்மையான அதிகாரப் பகிர்வை இந் நாட்டில் ஏற்படுத்த முடியாமல் போயுள்ளது.

அதனால்த்தான் ஒன்பது மாகாணங்களும் சுயாட்சியைக் கோர வேண்டும் என்றும் எந்த இரு மாகாணங்களோ அதற்கு மேற்பட்டவையோ தமக்குள் இணைய வழி வகுக்க வேண்டும் என்ற கருத்தை எமது சிங்கள சகோதரர்கள் மத்தியில் பரப்பி வருகின்றேன். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவே 1987ம் ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்தம், 13வது திருத்தச் சட்டத்திற்கு வழி வகுத்தது. அதனை முழு நாட்டுக்கும் ஏற்புடைத்தாக்கினார் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன அவர்கள். அதே போல் மாகாண சுயாட்சியை எல்லா மாகாணங்களும் கேட்டுப்பெற வேண்டும் என்ற கருத்தைப் பரப்பி வருகின்றேன்.

இன்று எமது அரசியல் தலைவர்களின் நிபந்தனை அற்ற ஆதரவுகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கடந்த மூன்று வரவு செலவுத் திட்டமுன் மொழிவுகளும் நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் ஒத்திசைவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அதில் தமிழ் மக்களுக்குக் குறிப்பிடத்தக்க நன்மைகள் கிடைக்கக்கூடிய ஒதுக்கீடுகளோ அல்லது திட்டங்களோ உள்வாங்கப்படாதது கவலையளிக்கின்றது. இவற்றை நாம் பகிரங்கமாக எடுத்துக்கூறினாலோ அல்லது அது பற்றி இடித்துரைத்தாலோ அரசு எம்மைப் பயங்கொண்டு பார்க்கின்றது. பயங்கரவாதிகள் என்று கூடப் பகர்கின்றது.

ஆனால் எம்மீது அரசாங்கத்தினர் சினம் கொண்டுவிடுவார்கள் என்பதற்காக எம்மை நம்பி வாக்களித்த மக்களின் தேவைகளைப் பற்றி அரசிற்கு எடுத்துக்கூறாது அவர்களை இன்முகங்காட்டி வரவேற்று உபசரிப்பது எமது மனச்சாட்சிக்கு விரோதமாக நாம் நடப்பதாக அமையும். இதனால்த்தான் நான் இன்முகம் காட்டி வரவேற்கும் அதே நேரம் அரச தலைவர் முன்னிலையிலோ , அமைச்சர்கள் முன்னிலையிலோ எமது மக்களின் பிரச்சனைகளையும் தேவைகளையும் இடித்துரைக்கப் பின்நிற்பதில்லை.

பாதிப்புக்களுக்கு உள்ளாகாத ஏனைய மாகாணங்களுக்கு வழங்குகின்ற முறையிலேயே 30 வருடங்களுக்கு மேல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது வடபகுதிக்கும் நிதிப் பங்கீடுகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றனர். இம் முறை தவறானதென்றும் பாதிப்புக்குள்ளான எமக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும்படியும் கோரினால் அதனை எமக்குத் தராது நாம் அபிவிருத்தி செய்யவில்லை என்று எம்மீது குறைகூறுகின்றார்கள் அல்லது தராத நிதி திரும்பிவிட்டதாக விசமப் பிரசாரம் மேற்கொள்ளுகின்றார்கள்.

எமது பாதிப்படைந்த பிரதேசத்தை முன்னேற்றுவதற்காக எங்கள் புலம்பெயர்ந்த உறவுகளிடம் இருந்து உதவிகளைப் பெற்று எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை மேற்கொள்ளலாம் என்ற நோக்கில் எம்மால் ஆக்கப்பட்ட முதலமைச்சர் நிதிய நியதிச்சட்டத்தை நான்கு வருடங்களாக அங்கீகாரம் வழங்காது தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் இழுத்தடிப்புச் செய்வது எமது வளர்ச்சியை எவ்வகையிலேனும் முடக்கிவிட வேண்டும் என்ற கபட நோக்கிலான செயற்பாடோ என்று எண்ண வேண்டியுள்ளது.

வெளியில் இருந்து வரும் நிதிகள் அனைத்தும் மத்திக்கூடாகக் கொண்டு வர வேண்டும் என்பது தேவையற்ற ஒரு செயற்பாடு. ஏன் என்றால் எமது முதலமைச்சர் நிதியமும் நாட்டின் கணக்காளர் நாயகத்தின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வையிலேயே நடைமுறைப்படுத்தப்படும். இதனால்த்தான் ஒரு இன ரீதியான சிந்தனை மத்திய அரசாங்கத்தை இவ்வாறான தவறுகளைச் செய்ய வைக்கின்றதோ என்று சிந்திக்க வைக்கின்றது.

எனதருமை தமிழ் பேசும் மக்களே! இந்த மாகாணத்தை முன்னேற்றுவதற்கு நாங்கள் எடுக்கின்ற முயற்சிகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டைகளையும் தடைகளையும் ஏற்படுத்தி வருகின்ற போதும் நாம் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து முன்நோக்கிச் செல்வதற்கு முடிந்தவரை முயற்சிக்கின்றோம். அதன் ஒரு வெளிப்பாடாக இன்றைய இந்த மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கின்ற இந்த நிகழ்வும் கொள்ளப்படலாம். ஏனென்றால் மாற்றுத்திறனாளிகள், போரினால் பாதிக்கப்பட்டோர் சம்பந்தமாக மத்திய அரசாங்கம் அதிகம் அலட்டிக் கொள்ளாமலேயே இருந்து வருகின்றது.

எனவே எமது அரசியல் முன்னெடுப்புக்களுக்கு நீங்கள் அனைவரும் உங்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க முன் வர வேண்டும். அரசின் நில அபகரிப்பு, பாரபட்ச நடவடிக்கைகள், வனத்தின் பெயரால் மக்களின் நில அபகரிப்பு, கடல் வளங்களைச் சூறையாடல் போன்ற கபளீகரங்களில் இருந்து எமது மக்களைப் பாதுகாப்பதற்கு நீங்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். யுத்தத்தினால் நொந்துபோய் இருக்கின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுவலுவுள்ள குடும்பங்கள் என அனைத்துத்தர மக்களையும் முன்னேற்றுவதற்கு எம்முடன் கைகோர்க்க நீங்கள் யாவரும் முன்வர வேண்டும் என வினயமாக வேண்டி எனது உரையை இத்துடன் நிறைவு செய்கின்றேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + two =

*