;
Athirady Tamil News

ரூ.10 கோடி பழைய நோட்டுக்களை மாற்றும் விவகாரம் – முன்னாள் கலெக்டரின் டார்ச்சரால் உறவினர் தற்கொலை..!!

0

உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் பதேவ் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் சிங் (வயது 51). கரும்பாலையில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், நேற்று மாலை திடீரென கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி ஆதர்ஷ் மண்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் வந்து விஜய் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், விஜய் சிங் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், தற்கொலைக்கு தனது மைத்துனரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான வினோத் குமார் பவார்தான் காரணம் என கூறியிருந்தார்.

‘பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது வினோத் குமார் பவாரிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தரும்படி என்னிடம் கேட்டார். நானும் 50 லட்சம் ரூபாய் வரை மாற்றுவதற்கு உதவிசெய்தேன். அதன்பிறகும் தொடர்ந்து 10 கோடி ரூபாய் பணத்தை மாற்றித் தரும்படி தொந்தரவு செய்து வருகிறார். என் தாயார் பெயரில் உள்ள ஒரு நிலத்தையும் மிரட்டி கைப்பற்றிக்கொண்டார்’ என விஜய் சிங் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். கடிதத்தில் உள்ள கையெழுத்து மற்றும் அதன் உண்மைத் தன்மையை அறிந்துகொள்வதற்காக வல்லுநர் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட பவார் காசியாபாத்தைச் சேர்ந்தவர். இவர் முசாபர் நகர் கூடுதல் மாவட்ட கலெக்டராகவும், பிஜ்னோர் மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*