;
Athirady Tamil News

பாராளுமன்ற தேர்தல் – பூரி தொகுதியில் மோடி போட்டி?..!!

0

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) தேர்தல் வர உள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, இப்போதே அதற்கு தயாராக தொடங்கி விட்டது.

தோழமை கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மக்களிடம் ஆதரவு திரட்டும் பிரசாரம் பொறுப்பை பிரதமர் மோடி ஏற்றுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது உத்தரபிரதேசம், பீகார் இரு மாநிலங்களிலும் மோடி அதிக கவனம் செலுத்தி, அதிக பொதுக்கூட்டங்களில் பேசினார். இந்த ஆண்டும் அதே பாணியை கடை பிடிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். உத்தரபிரதேசத்தில் மட்டும் இந்த ஆண்டு இறுதிக்குள் 50 பொதுக்கூட்டங்களில் பேச அவர் திட்டமிட்டுள்ளார்.

அதன் ஒரு கட்டமாக பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) வாரணாசி செல்ல உள்ளார். 2 நாள் சுற்றுப்பயணமாக செல்லும் மோடி அசம்கர், வாரணாசி, மிர்சாபூர் ஆகிய 3 மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இந்த மூன்று மாவட்டங்களிலும் சில நலத்திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

இதையொட்டி அந்த 3 மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக அண்டை மாவட்டங்களில் இருந்து ஆயிரக் கணக்கான போலீசார் அந்த 3 மாவட்டங்களுக்கும் வந்துள்ளனர்.

அவர்கள் தங்கி ஓய்வு எடுப்பதற்காக இந்த 3 மாவட்டங்களிலும் சுமார் 25 பள்ளிக்கூடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த 25 பள்ளிக்கூடங்களுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சமாஜ்வாடி கட்சி எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பாராளுமன்ற தேர்தல் தேதி பிப்ரவரி மாதம் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக 200 பிரமாண்ட பொதுக்கூட்டங்களை நடத்தி முடிக்க பா.ஜ.க. மூத்த தலைவர்கள் வியூகம் வகுத்துள்ளனர். ஒரு பொதுக் கூட்டத்துக்கு 2 அல்லது 3 எம்.பி. தொகுதிகள் வீதம் சுமார் 400 தொகுதிகளில் பிப்ரவரி மாதத்துக்குள் முதல் கட்ட பிரசாரத்தை முடித்து விட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்த 200 பொதுக்கூட்டங்களில் சுமார் 50 கூட்டங்களில் பிரதமர் மோடி பேச உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜங்கிள்மகால், உத்தரபிரதேசத்தில் உள்ள ஷாஜகான்பூர் நகரங்களில் விரைவில் மோடி பிரமாண்ட கூட்டங்களில் பேச உள்ளார்.

இதைத் தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள சிக்கோடி, ஸ்ரீவேரி நகரங்களில் நடக்கும் கூட்டங்களில் மோடி பேச இருக்கிறார். அதன் பிறகு அவர் ஒடிசா மாநிலத்துக்கு செல்ல உள்ளார்.

தமிழ்நாட்டுக்கு மோடி செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வருவார் என்று கூறப்படுகிறது. மோடி மட்டும் சுமார் 150 எம்.பி. தொகுதிகளில் ஆதரவு திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி ஆகியோர் தலா 40 முதல் 50 கூட்டங்களில் பேச உள்ளனர்.

இதற்கிடையே ஒடிசா மாநிலத்தில் பிரதமர் மோடியும், பா.ஜ.க. மூத்த தலைவர்களும் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். சமீபத்தில் பூரி தொகுதி பற்றிய ரகசிய சர்வே ஒன்றை பா.ஜ.க. வினர் நடத்தினார்கள்.

எனவே பிரதமர் மோடி பூரி தொகுதியில் போட்டியிட கூடும் என்று பா.ஜ.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் யாரும் இது பற்றி பேச மறுத்து விட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 3 =

*