;
Athirady Tamil News

உ.பி.யில் ரூ.23 ஆயிரம் கோடியில் விரைவு சாலை- அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..!!

0

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. இதற்காக பிரதமர் மோடி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். 2014-ம் ஆண்டு தேர்தலின் போது உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக கூட்டங்களில் பங்கேற்று மோடி பேசினார்.

அதுபோல், இந்த தடவையும் மோடி உத்தரபிரதேசத்தில் உள்ள தொகுதிகளை குறிவைத்து பிரசாரம் செய்ய உள்ளார். முதல் கட்டமாக வாரணாசி, ஆசம்கர், மிர்சாபூர் பகுதிகளில் நடைபெற கூட்டங்களில் மோடி பிரசாரம் செய்ய இருக்கிறார்.

அதன் ஒருபகுதியாக, ஆசம்கர் சென்றடைந்த பிரதமர் மோடி, ரூ.23 ஆயிரம் கோடி செலவில் அங்கு அமைக்கப்பட உள்ள புரவஞ்சல் விரைவு நெடுஞ்சாலை திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார்.

இதைத்தொடர்ந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :-

புரவஞ்சல் விரைவு நெடுஞ்சாலை திட்டத்தினால் கிழக்கு உ.பி.யில் உள்ள நகரங்கள் சீரான வளர்ச்சியடையும். இந்த திட்டத்திற்காக ரூ.23 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளது. உ.பி மாநிலத்திற்காக பா.ஜ.க அரசு பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி வருகிறது.

நெடுஞ்சாலை திட்டப் பணிகளை மட்டுமே நாங்கள் மேற்கொள்ளாமல், நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து திட்டங்களிலும் கவனம் செலுத்தி வருகிறோம். வாரணாசியில் – ஹல்தியா இடையிலான கப்பல் போக்குவரத்து, இப்பகுதியில் தொழில் துறை வளர்ச்சியடைய முக்கிய பங்கு வகிக்கும். மேலும், உதான் திட்டத்தின் கீழ் 12 விமான நிலையங்களும் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான கட்சி என அதன் தலைவர் தெரிவித்ததாக செய்தித்தாள்களில் படித்தேன், காங்கிரஸ் ஆண் முஸ்லிம்களுக்கானதா ? அல்லது பெண் முஸ்லிம்களுக்கும் சேர்த்துதானா ? என முத்தலாக் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை பிரதமர் விமர்சித்தார்.

அசம்கர் பயணத்தை அடுத்து மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் இன்று உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 − three =

*