;
Athirady Tamil News

பணம் இல்லாமல் கணவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய பிச்சை எடுத்த பெண்..!!

0

சித்தூர் அடுத்த புங்கனூர் ஈடிகப்பள்ளியை சேர்ந்தவர் பாபுசாயபு (வயது 48), கட்டிடத்தொழிலாளி. இவர், கடந்தசில நாட்களாக உடல் நலப்பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். மனைவி தவுலத்பீவி, கணவரை சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் அவசர பிரிவில் சேர்த்தார்.

அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பாபுசாயபுவை டாக்டர்கள் திருப்பதி ருயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்தனர். ஆனால், மேல் சிகிச்சைக்காக கணவரை திருப்பதிக்குக் கொண்டு செல்ல தவுலத்பீவியிடம் பணம் இல்லாததால் மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை அளிக்கும் படி மன்றாடினார். அதை தொடர்ந்து, அவரை அங்கேயே வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பாபுசாயபு பரிதாபமாக இறந்தார்.

எனினும் கணவரின் உடலை வீட்டுக்குக் கொண்டு செல்லவும், இறுதிச்சடங்கை செய்யவும் தவுலத்பீவியிடம் பணம் இல்லாததால் அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி கண்ணீர் விட்டு கதறி அழுதார். மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வரும் ஊழியர்களிடமும், சிகிச்சைக்காக வந்த நோயாளிகள், அவர்களுடன் வந்தவர்களிடமும் பிச்சை எடுத்தார்.

அதில் சேர்ந்த சிறு தொகையை வைத்துக் கொண்டு ஒரு ஆட்டோவை அமர்த்தி, அதன் மூலம் தனது கணவரின் பிணத்தைச் சொந்த ஊருக்குக் கொண்டு சென்று இறுதிச்சடங்கை செய்தார்.

இறந்த கணவரின் பிணத்தை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லவும், இறுதிச் சடங்கை செய்யவும் பணம் இல்லாமல் மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கண்ணீரோடு பெண் பிச்சை எடுத்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 18 =

*