இந்தியா, ஆப்பிரிக்கா உறவை மேம்படுத்த 10 கோட்பாடுகள்- உகாண்டா பாராளுமன்றத்தில் மோடி உரை..!!

அரசுமுறை பயணமாக உகாண்டா வந்தடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி தலைமையில் முப்படையினர் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தின்போது இந்தியா – உகாண்டா இடையில் 4 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. மேலும், ராணுவ ஒத்துழைப்பு, விசா நீட்டிப்பு, கலாசார பரிவர்த்தனை தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து, உகாண்டா பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்று சிறப்புரையாற்றினார், அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
சிறந்த செல்வ வளங்களையும், பாரம்பரியத்தையும் உடைய உகாண்டா ஆப்பிரிக்கா கண்டத்தின் முத்து போல திகழ்கிறது.
பண்டைய கடல்சார் தொடர்புகள், காலனித்துவத்தின் இருண்ட காலம், ஒன்றிணைந்து சுதந்திரத்திற்காக போராடியது, பிளவுபட்ட உலகில் தனித்துவமான நாடுகளுக்கான நிச்சயமற்ற பாதைகள், நமது இளைஞர்களின் ஒற்றுமையான நம்பிக்கை போன்றவை இந்தியா மற்றும் உகாண்டாவை இணைக்கும் அம்சங்களாக உள்ளன.
ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் உறவு 10 கோட்பாடுகளின்படி தொடர்ந்து வழிநடத்தப்படும். அவைகளாவன :-
1. இந்தியா ஆப்பிரிக்காவிற்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கும், 2. ஆப்பிரிக்காவின் முக்கியத்துவத்தை பொறுத்து நம் இருநாடுகளின் வளர்ச்சி திட்டங்கள் அமையும், 3. எளிமையாகவும், கவர்ச்சிகரமாகவும் வர்த்தகம் செய்வதற்கு ஏதுவாக இந்திய சந்தைகள் திறந்திருக்கும்.
4. இந்திய டிஜிட்டல் புரட்சி அனுபவத்தின் மூலம் ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும். 5. உலகின் 60 % சாகுபடி நிலத்தை உடைய ஆப்பிரிக்காவின் விவசாயத்தை மேம்படுத்தும் பணிகளில் இணைந்து செயல்படுவோம்.
6. ஆப்பிரிக்காவுடன் இணைந்து இந்தியா பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இருக்கும் சவால்களை உலகுக்கு எடுத்துரைக்கும், 7. பயங்கரவாத்தை எதிர்ப்பதில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம், 8. அனைத்து நாடுகளும் பயன்பெறும் வகையில் கட்டுப்பாடுகள் அற்ற கடல் பயணத்திற்காக இணைந்து செயல்படுவோம்.
9. ஆப்பிரிக்க இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம், 10. உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர். சுதந்திரத்திற்காக ஒன்றிணைந்து போராடியதை போல அவர்களின் ஜனநாயக ஒழுங்கு நடைமுறைக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.