;
Athirady Tamil News

காவிரியில் கழிவுநீர் கலக்கும் விவகாரம் – சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்..!!

0

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உள்ளிட்ட சில நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் கலக்கின்றன. அபாயகரமான கழிவுகளோடு தமிழகத்துக்கு வரும் காவிரி நீரில் விளையும் பயிர்களில் துத்தநாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப்பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவருகிறது. இதனால் காவிரி கரையோரம் வாழ்பவர்கள் பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

எனவே, கர்நாடகா மாநிலத்தில் கழிவுநீரை நேரடியாக ஆற்றில் விடாமல், சுத்திகரித்த பிறகு ஆற்றில் கலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டுக்குழு கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படும் காவிரிநீரின் தரத்தை பரிசோதனை செய்து ஜூலை மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

கடந்த 16-ந் தேதி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், காவிரி உருவாகும் இடத்திலோ, கர்நாடக பகுதியிலோ ஆற்றில் எங்கும் கழிவுநீர் கலக்கப்படவில்லை. காவிரி நீர் செல்லும் வழியில் கழிவுநீர் கலக்கப்படுகிறது. தென்பெண்ணையாறு, அக்ராவதி ஆகிய காவிரியின் கிளை நதிகள் மாசடைந்த நிலையில் தமிழ்நாட்டுக்குள் பிரவேசிக்கின்றன என்று கூறப்பட்டது.

இந்த அறிக்கையின் மீது தமிழக, கர்நாடக அரசுகள் 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவரின் தலைமையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழக, கர்நாடக அரசுகள் தரப்பில் தலா 2 அதிகாரிகள் கொண்ட 7 நபர் குழுவை அமைத்து காவிரிநீரின் மாசு அளவை ஆய்வு செய்து, கண்காணிக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் கழிவுநீரை சுத்தப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைகளால் உருவாகும் மாசுக்கேடு ஆகியவற்றையும் கண்காணிக்க வேண்டும்.

மத்திய மற்றும் இருமாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளை கொண்ட கூட்டுக்குழு காவிரி (அஜ்ஜிபோர் கர்நாடகா), தென்பெண்ணையாறு (சொக்கரசனபல்லி தமிழ்நாடு), அக்ராவதி (சங்கமா கர்நாடகா) ஆகிய நதிகளில் இருந்து தண்ணீர் மாதிரிகளை சேகரித்து தமிழ்நாட்டுக்குள் காவிரிநீர் நுழையும் முன்பு அதன் தரம் பற்றிய மதிப்பீட்டை செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டுக்குள் நுழையும் நதிநீரின் சுத்தத்தன்மையை உறுதிப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த இரு குழுக்களும் இரு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களுடன் தகவல்களை பகிர்ந்துகொள்ள உத்தரவிட வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + 10 =

*