;
Athirady Tamil News

கூட்டு ஒப்பந்த விடயத்தில் வாய் மூடி மௌனமாக இருக்க முடியாது..!!

0

தொழிலாளர்கள் நலன் சார்ந்த கூட்டு ஒப்பந்த விடயத்தில் வாய் மூடி மௌனமாக இருக்க முடியாது. மலையகத்தின் இரண்டாம் தொழிற்சங்கமாக முப்பதாயிரத்திற்கு அதிகமாக அங்கத்தவர்கள் கொண்ட தொழிற்சங்கம் தொழிலாளர் தேசிய சங்கமாகும். என்னை நம்பி உள்ள அவர்களுக்கு நான் பதில் கூற வேண்டும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்தெரிவித்தார்.

கட்டுமான பணிகள் பாதியில் கைவிடப்பட்ட நோர்வூட் நகர சிவ சுப்பிரமணிய ஆலய கலாச்சார மண்டப புனரமைப்புக்காக 25 இலட்சம் ரூபாவை மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் கையளிக்கும் நிகழ்வு இன்று நோர்வூட் நகர சிவ சுப்பிரமணிய ஆலய கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

நான் மலையகத்திற்கு அமைச்சராக வந்ததன் பின்பு ஐந்து முக்கிய விடயங்களை மக்களுக்காக செய்துள்ளேன். கடந்த காலங்களில் பிராய்சித்தமாக மக்களுக்கு செய்த உதவிகளை விட நான் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் கூடுதலாகவே செய்துள்ளேன்.

அந்தவகையில் 7 பேர்ச் காணிகளை பெற்றுக் கொடுத்து அதற்கான சரியான ஒப்பனையை பெற்றுக்கொடுத்துள்ளேன். மக்கள் நிம்மதியாக வாழ கூடிய தனி வீடுகளை அமைத்துக் கொடுத்து வருகின்றேன்.

இதனை விட பிரதேச சபைகளை மக்கள் நலன் கருதி விஸ்தரிப்பு செய்துள்ளேன். அதேபோன்றே அதிகார சபைகளை உருவாக்குவதற்கு அமைச்சரவை பத்திரத்தையும் சமர்ப்பித்துள்ளேன்.

இவ்வாறாக நல்ல காரியங்களை ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியிலே செய்து வருகின்ற நிலையில் மேலும் அபிவிருத்தி பணிகளை ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியிலேயே செய்துக் கொள்ள வேண்டும்.

மாறாக வேறு யாராவது ஆட்சிக்கு வந்தால் இராணுவ ஆட்சியை விட மிக மோசமான நிலை உருவாகும்.

தேயிலை விலை இன்று உயர்வான நிலைக்கு சென்றுள்ளது. இந்நத நிலையில் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் திகாம்பரம் வாயை மூடி கொண்டிருந்தால் ஆயிரம் ரூபாவை பெற்றுத் தருகின்றோம் என்று சொல்கின்றார்கள்.

ஆனால் இந்த விடயத்தில் என்னால் வாயை மூடி கொண்டு மௌனமாக இருக்க முடியாது. காரணம் மலையகத்தில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட அங்கத்தவர்களை கொண்டுள்ள இரண்டாவது தொழிற்சங்கமாக தொழிலாளர் தேசிய சங்கம் விளங்குகின்றது.

என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கும் எனது அங்கத்தவர்களுக்கும் நான் பதில் கூற வேண்டும். ஆகையால் நான் செய்வதை செய்து கொண்டே இருப்பேன். அதேவேளையில் ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுத்தால் மாலை போட்டு வரவேற்பேன்.

நோர்வூட் நகரத்தில் மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. மாற்றணியினர் நினைத்திருந்தால் இவர்களுக்கு குடிநீர் வசதியை செய்து கொடுத்திருக்க முடியும். அதேபோன்று இங்குள்ள ஆற்றினை அகலப்படுத்தியும், சுத்தப்படுத்தியும் எதிர்காலத்தில் குடிநீர் வசதியை நான் பெற்று கொடுப்பேன். என்னை நம்புங்கள்.

கோடிஸ்வரனாக இருந்த நான் மக்களுக்கு சேவை செய்து அனைத்தையும் அழித்துக் கொண்டு எமது மக்களின் முன்னேற்றத்திற்காக போராடி வருகின்றேன் என்பதை மக்கள் உணர வேண்டும்.

நேர்மையாகவும், நியாயமாகவும் சேவை செய்யும் என்னை தேர்தல் காலங்களில் சாப்பாட்டுக்கும், மதுவுக்கும் அடிமைப்பட்டு புறந்தள்ளுகின்றனர். மலை மலையாக ஏறி பொய் சொல்லி மக்களை திசை திருப்பி வாக்குகளை பெற்றுக் கொள்கின்றனர்.

எதிர்காலம் இவ்வாறாக அமைய கூடாது. உண்மையை பேசினால் என்னை ஒதுக்கும் நிலை உள்ளது. இந்த நிலையும் மாற வேண்டும். நாட்டின் அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம் என்பது அனைத்து மக்களுக்கும் தான்.

மாறாக மலையக மக்களுக்கு மட்டுமல்ல. இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக எமது மக்களின் முன்னேற்றத்திற்கு அதிகபட்ச அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வரும் எம்மை எதிர்கால தேர்தலில் புறக்கனிக்காது. ஏமாற்றுகாரர்களை விரட்டியடிக்க மக்கள் தயாராக வேண்டும் என்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + 17 =

*