;
Athirady Tamil News

கம்போடியா பொதுத்தேர்தல் முடிந்தது – மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா ஹூன் சென்?..!!

0

தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான கம்போடியா 1978 ஆம் ஆண்டு, வியட்நாம் கிமர் செம்படையுடன் போர் தொடுத்தது. போரும், வன்முறைகளும் 1978 – 1989 வரை தொடர்ந்தன. 1989ம் ஆண்டு, முதன்முதலாக பாரிஸ் நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. ஐக்கிய நாடுகள் அவையின் வழிநடத்துதலின் மூலம் 1991 ம் ஆண்டு சண்டை நிறுத்தமும், ஆயுதகுறைப்பும் நடைமுறைக்கு வந்தது.

சுமார் 20 ஆண்டுகள் நடைபெற்ற கொடிய போரினால் கம்போடியா நாட்டின் பண்பாடு, பொருளாதாரம், சமூகம், அரசியல் என அனைத்து துறைகளும் பெரும் சிதைவடைந்து காணப்பட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். கம்போடியாவின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட நாடுகளான ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா ஆகியன பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.

தற்போது கம்போடியாவில் சுமார் ஒன்றரை கோடி மக்கள் வாழ்கின்றனர். 1993-ம் ஆண்டு ஏற்கப்பட்ட நாட்டின் அரசியல் சாசனத்தின்படி அரசியல் சாசனத்திற்குட்பட்ட மன்னராட்சி முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் தற்போது கம்போடியாவில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நாட்டின் பிரதமராக கடந்த 1985-ம் ஆண்டு முதல் ஆட்சி செலுத்திவரும் ஹூன் சென் உலகிலேயே அதிக காலம் ஒரு நாட்டின் பிரதமர் பதவியை வகித்தவராக அறியப்படுகிறார்.

கடந்த 2013-ம் ஆண்டு மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹூன் சென், பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத்தேர்தலை நடத்த தீர்மானித்தார். இதற்கு அந்நாட்டின் உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்தது.

இதைத்தொடர்ந்து 123 உறுப்பினர்களை கொண்ட கம்போடியா பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. கம்போடியா தேசிய மீட்பு கட்சி உள்பட பல்வேறு கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு கலைக்கப்பட்ட நிலையில் (உள்ளூர் நேரப்படி) மாலை 3 மணியுடன் முடிவடைந்தது.

இன்றைய தேர்தலில் 80.49 சதவீதம் வாக்குகள் பதிவானதாகவும், வாக்குரிமை பெற்ற சுமார் 67 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றியதாகவும் தெரிவித்துள்ள கம்போடியா நாட்டின் தலைமை தேர்தல் கமிஷனர் சில் புன் ஹோக், இந்த எண்ணிக்கையே இந்த தேர்தல் வெற்றிகரமாக நடந்ததற்கான அடையாளம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தலை கண்காணிக்க ஈரான், ரஷியா, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பார்வையாளர்கள் வந்துள்ளனர். தேர்தல் சுதந்திரமாகவும் அமைதியாகவும் நடந்து முடிந்ததாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும், பிரதமரை எதிர்த்து தேர்தல் களத்தில் மிகச்சிறிய கட்சிகள் மட்டுமே காணப்படுவதாகவும், அவர்களுக்கும் பிரசாரத்துக்கு வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை என்றும், ஊடக சுதந்திரம் பறிக்கப்ப்ட்டதாகவும் வாக்குப்பதிவில் தில்லுமுல்லு நடந்ததாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

முதல்கட்ட தேர்தல் முடிவுகள் இன்றிரவு வெளியாக தொடங்கினாலும், அதிகாரப்பூர்வமான வெற்றி நிலவரம் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

33 ஆண்டுகாலம் பிரதமராக பதவி வகித்த ஹூன் சென் இந்த தேர்தலிலும் அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவார் என அவரது ஆதரவாளர்கள் திடமாக நம்புகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + twelve =

*