;
Athirady Tamil News

இலங்கையில் வடமாகாணத்திலேயே அதிகளவான போதைப்பொருள் பாவனை – முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்..!!

0

இலங்கையில் வடமாகாணத்திலேயே அதிகளவான போதைப்பொருள் பாவனை உள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்தார்.

இன்று வவுனியா நகரசபையில் 30வது தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனத்தின் வவுனியா மாவட்ட விளையாட்டுப்போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்திலே விளையாட்டு நிகழ்வுகள், கலை நிகழ்வுகள், அல்லது இளைஞர்கள் சார்பான வேறு நிகழ்வுகளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பங்களிப்பு மிகப்பெரிதாகும்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் இவ்விளையாட்டுக்களில் இளைஞர்கள் இன மத பேதமின்றி பயணித்து தேசிய ரீதியில் மிளிர்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களிற்கு இருக்கின்றது.

இன்று வடக்கு கிழக்கிலே இருக்கின்ற இளைஞர் யுவதிகளை பார்க்கின்ற போது அதிகளவாக போதைப்பொருளிற்கு அடிமையானவர்களாகத்தான் இருக்கின்றார்கள். இந்த நாட்டிலே போதைப்பொருள் அதிகம் இருக்கின்ற மாகாணமாக வடமாகாணம் திகழ்கின்றது.

கடந்த காலத்திலே ஆட்சி செய்த ஆட்சியாளர்களிற்கு மத்தியிலே இப்பொழுது இலங்கையை ஆளுகின்ற மைத்திரிபால சிறீ சேன தலைமையிலான அரசு போதையற்ற நாடாக மாற்றுவோம் என சபதமெடுத்திருந்தனர். இவர்களது ஆட்சியில்தான் இன்று இலங்கையிலே குறிப்பாக வடமாகாணத்தில்தான் அதிகளவான பேதைப்பொருள் பாவனையில் இருக்கின்றது.

இப்போதைப்பொருள் பாவனையால் இளைஞர்களின் வாழ்க்கையை பாதிப்பதோடு. அவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. எத்தனையோ அழிவுகளை தடுத்த இந்த அரசாங்கத்தால் இந்த போதைப்பொருளை மட்டும் தடுக்க முடியவில்லை.

இதன் காரணமாக எங்களது இளைஞர், யுவதிகள் தங்களது எதிர்காலத்தை சிதைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். எனவே போதையற்ற மாகாணமாக இந்த வடமாகாணத்தை மாற்ற இளைஞர்கள், மக்கள் பிரதிநிதிகள், தேசிய இளைஞர் சம்மேளன உறுப்பினர்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 3 =

*