;
Athirady Tamil News

மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்..!!

0

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் ‘மனதின் குரல்’ என்ற தலைப்பில் நாட்டு மக்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஜூலை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று அவர் பேசியதாவது:-

அண்மையில் தாய்லாந்து நாட்டின் கால்பந்து குழுவைச் சேர்ந்த 12 சிறுவர்கள் பயிற்சியாளருடன் நீரோட்டமுள்ள ஒரு குகையை பார்வையிட சென்றபோது அதனுள் சிக்கிக் கொண்டனர். பெரும் ஆபத்து சூழ்ந்த நிலையில் அனைவரும் 18 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டனர்.

அந்த சிறுவர்கள் நம்பிக்கை தளரவிடாமல் இருந்ததைப் பார்த்து உலகமே வியப்பில் ஆழ்ந்தது. அனைவரும் உறுதியாகவும், திட மனது கொண்டவர்களாகவும் இருந்தால் எத்தகைய கடினநிலையில் இருந்தும் விடுபடலாம் என்பதை இந்தச் சம்பவம் நம் அனைவருக்கும் உணர்த்தி இருக்கிறது.

பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் தற்போது கல்லூரியில் சேர்ந்து படிப்பை தொடங்கும் நேரம் இது. மாணவர்கள் தங்களை சுய உத்வேகம் கொண்டவர்களாக, வழிகளை அறிந்து கொள்பவர்களாக உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

அதே நேரம் அமைதியாக இருங்கள். வாழ்க்கையில் உங்களுடைய உள்மன அமைதியை முழுமையாக அனுபவியுங்கள். புத்தகங்கள் மிகவும் அவசியம். படிப்பதும் முக்கியம்தான். புத்தம் புது விஷயங்களை தேடும் இயல்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஆசாராம் சவுத்ரியின் தந்தை துப்புரவு பணியாளர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் ஆசாராம் சவுத்ரி, எய்ம்ஸ் மருத்துவமனை நுழைவுத் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் இணைந்துள்ளார். இப்படி எத்தனையோ மாணவர்கள் கடின சூழ்நிலைகளையும் தடைகளையும் தாண்டி தங்களது அயராத முயற்சியால் சாதித்து காட்டி உலகை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர்.

சுய ராஜ்ஜியம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் பால கங்காதர திலகர். சாகசமும், தன்னம்பிக்கையும் நிறைந்தவர். மக்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தியவர். ஆங்கிலேய ஆட்சியாளர்களின் தவறுகளை நேருக்கு நேராக சுட்டிக் காட்டியவர். 3 முறை ராஜ துரோக குற்றச்சாட்டை அவர் மீது வெள்ளையர்கள் வைத்தனர். அவருடைய முயற்சிகள் காரணமாகவே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பாரம்பரியம் உண்டானது.

இந்த பண்டிகை, சமூக விழிப்புணர்வு, ஒருங்கிணைந்த செயல்பாடு, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளை முன்னெடுத்துச் செல்ல வல்லமைமிக்க ஒரு கருவியாக மாறியிருக்கிறது.

இந்த முறையும் நாம் விநாயகர் சதுர்த்தியை மிகுந்த ஈடுபாட்டுடன் கொண்டாடுவோம். விநாயகரின் திருவுருவத்தை அலங்கரிப்பது முதல் அனைத்துப் பொருட்களும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 4 =

*