;
Athirady Tamil News

அசாம் குடிமக்கள் பதிவேடு குறித்து யாரும் பீதி அடைய வேண்டாம் – உள்துறை மந்திரி விளக்கம்..!!

0

அசாம் மாநிலம் வங்கதேசத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் குடியேறி விடுகின்றனர். இதனால் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், யார் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. அசாம் மக்களோடு மக்களாக அவர்கள் கலந்து வசித்து வருவதால் அதிகாரிகளுக்கு அவர்களை இனம் பிரிப்பதில் சிக்கல் உள்ளது.

இதைத் தடுப்பதற்காக அங்கு தேசிய குடிமக்கள் பதிவேட்டை அசாம் மாநில அரசு தயார் செய்து வருகிறது. அவ்வகையில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி வரைவுப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அசாம் மாநிலத்தில் 3.29 கோடி பேர் வசித்து வரும் நிலையில், 2.89 கோடி மக்களின் பெயர் மட்டுமே இன்று வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருக்கிறது. இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், “தேசிய மக்கள் பதிவேடு பாரபட்சமற்றது, பெயர் இடம் பெறவில்லையென்று யாரும் அச்சப்பட வேண்டாம். பெயர் விடுபட்டவர்கள் தாங்கள் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்படும். பெயர்கள் இடம் பெறாவிட்டாலும் எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படாது.

ஒரு சிலர் வேண்டும் என்றே அச்ச உணர்வை உருவாக்க திட்டமிடுகின்றனர். தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது முற்றிலும் பாரபட்சம் இல்லாதது. எந்த தவறான தகவலையும் பரப்பக்கூடாது. இது ஒரு வரைவு அறிக்கை மட்டுமே இறுதிப்பட்டியல் அல்ல” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − four =

*