;
Athirady Tamil News

யாழில் அதிகரித்துள்ள வன்முறைகளை கட்டுப்படுத்துவதில் பொலிஸார் தீவிரம் காட்டவில்லை..!!

0

யாழ்ப்பாணக் குடாநாட்டில் யாழ்ப்பாணம், சுன்னாகம், கோப்பாய் மற்றும் மானிப்பாய் ஆகிய 4 பொலிஸ் பிரிவுகளில் வாள்வெட்டு வன்முறைகள், உள்ளிட்ட அதிகரித்துள்ளன. அவற்றை கட்டுப்படுத்துவதில் பொலிஸார் தீவிரம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டை வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதனால் அந்த 4 பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுப்புகளை இன்று நடைமுறைக்கு வரும் வகையில் அவர் இரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைய நாள்களாக வன்முறைக் கும்பல்களின் அடாவடிகள் அதிகரித்துள்ளன. 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று வாள்களுடன் வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடிகளில் ஈடுபடுகின்றது.

இரவுவேளை மட்டுமன்றி பட்டப்பகலிலும் வாள்களுடன் வரும் இந்தக் கும்பல் வான், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பெறுமதியான பொருள்களை சேதப்படுத்திவிட்டுச் செல்கின்றது.

நல்லூர் பிரதேச செயலக பிரிவில் வண்ணார்பண்ணை வடகிழக்கு பிரிவுக்குப் பொறுப்பான கிராம அலுவலகரின் அலுவலகத்துக்குள் கடந்த திங்கட்கிழமை பட்டப்பகலில் வாள்களுடன் புகுந்த கும்பல் அவரை அச்சுறுத்தியதுடன், அலுவலக உடமைகளையும் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றது.

வன்முறைக் கும்பல்களின் குற்றச்செயல்கள் அதிகரிக்கின்ற போதும் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸார் அக்கறை காட்டுவதில்லை என்று பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளும் வகையில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்று யாழ்ப்பாண பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாரின் ஈடுபாடு போதாமல் உள்ளது.

அதனால் மறு அறிவித்தல் வரும் வகையில் 4 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படுவதாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்தும் முகமாக, விசேட மோட்டார் சைக்கிள் படையணியொன்று களமிறங்கப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி எமது செய்திசேவைக்கு இன்று தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ரோந்து நடவடிக்கைகளுக்காக, சுமார் 10 மோட்டார் சைக்கிள்கள் அடங்கிய சிறப்பு பொலிஸ் அணியொன்று களமிறக்கப்பட்டுள்ளதாக மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் அதிபர் தெரிவித்தார்.

இதேவேளை, வண்ணார்பண்ணை வடகிழக்கு கிராம அலுவலரின் அலுவலகம் இயங்கும் வாடகை வீட்டில் முன்னர் வாள்வெட்டுக்குழுக்களுடன் தொடர்புடைய ஒருவர் வசித்து வந்ததார்.

அவர் மீது தாக்குதல் நடத்தவே வந்த குழுவினர் கிராம அலுவலகரின் அலுவலகத்தை சேதப்படுத்தியதுடன், அவரையும் அச்சுறுத்தியுள்ளனர்” என்றும் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டொ கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 2 =

*