;
Athirady Tamil News

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு..!! (படங்கள்)

0

திருகோணமலை, கன்னியா, காயத்திரிஅம்மன் கோயில் வீதிக்குப் பின்னாலுள்ள காட்டுப்பகுதிக்குள் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலமொன்று, இன்று (02) கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கன்னியா காட்டுப் பகுதிக்கு விறகு எடுக்கச்சென்ற நபரொருவர், பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 எனும் இலக்கத்துக்கு வழங்கிய தகவலையடுத்து, மேற்படி சடலம் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

குறித்த சடலம், மரத்தில் தொங்கிய நிலையில், முழங்கால் இரண்டும் பூமியில் பட்டுக்கொண்டிருப்பதையும் சாரம், பெணியன் உடம்பில் காணப்படுவதையும் அவதானிக்க முடிந்தது.

இரண்டு பாதணிகள், சடலத்துக்கு 10 மீட்டருக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர் அணிந்திருந்த சேட், கைக்குட்டை, முஸ்லிம் சகோதரர்கள் அணியக்கூடிய தொப்பியொன்றும், சடலத்துக்கு சற்று தொலைவில் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சேட் பக்கட்டுக்குள், திருகோணமலையிலிருந்து கன்னியாவுக்கு கடந்த ஜூலை மாதம் 10ஆம் திகதி பெறப்பட்ட பஸ் டிக்கெட்டும் பெறப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தை பார்வையிட நீதவான் நேரில் வரவுள்ளதாகவும் அதனையடுத்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய பரிசோதனைக்காக கொண்டு செல்லவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இம்மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் இது ஒரு கொலையாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

​மேலும் இது தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை உப்புவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 12 =

*