;
Athirady Tamil News

தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட அத்தனை வன்கொடுமைகளுக்கும் பதில்சொல்லியே ஆகவேண்டும்..!!

0

தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட அத்தனை வன்கொடுமைகளுக்கும் ஒருநாள் பதில்சொல்லியே ஆகவேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகபேச்சாளர் க. துளசி தெரிவித்துள்ளார்.

இலங்கை – இந்திய ஒப்பந்த காலத்தில் 2-8-1989ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் இந்திய அமைதிப்படையினர் தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்திய மிலேச்சத்தனமான துப்பாக்கி பிரயோகத்தில் குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் உட்பட 63 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அந்த அனர்த்தத்தின் 29 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம்(வியாழக்கிழமை) வல்வெட்டித்துறையில் ஜனநாயக போராளிகள் கட்சியினர் மற்றும் வல்வை நலன்புரி சங்கத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘இலங்கை தீவிலே தமிழினம் தமது இறையாண்மை, வாழ்வுரிமைகளை இழந்து அல்லலுற்ற போது தமிழர்களின் நேசக்கரமாக, தமிழர்களின் பாதுகாவலர்களாக தம்மை முன்னிறுத்தி நியாயப்பாடான தீர்வுகளை பெற்றுத்தருவார்கள் என நாங்கள் நம்பிய இந்திய பேரரசு எமது மக்களுக்கெதிராக தன் இராணுவ மேலான்மையை பயன்படுத்தி படுகொலைகளை அரங்கேற்றிய போதுதான் தமிழினம் பூமிப்பந்தில் ஏதிலிகள் என்பதை உணர்ந்தோம்.

தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற படுகொலைகளுக்கான நீதி விசாரணைகளோ நியாயமான இழப்பீடுகளோ இதுவரையிலும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்திய நடுவண் அரசு கூட தனது இராணுவத்திடம் இப்படுகொலைக்கான உள்ளக விசாரணைகளை இதுவரை மேற்கொள்ளவில்லை.

தமிழினம் தாம் சந்தித்த பேரிடர்களில் இருந்தெல்லாம் தானாகவே மீண்டெழுந்துள்ளது. தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட அத்தனை வன்கொடுமைகளுக்கும் ஒருநாள் பதில்சொல்லியே ஆகவேண்டும்.

அதுவரை வீழ்த்தப்பட்ட ஆத்மாக்களின் ஆத்மபலத்தோடு நாம் பயணிப்போம்’ என அவர் கூறியுள்ளார்.

குறித்த நிகழ்வில் படுகொலையில் உயிரிழந்தவரின் உறவுகள், மாகாணசபை உறுப்பினர்கள், வல்வை நகரசபை தலைவர், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் எனபலரும் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 8 =

*