;
Athirady Tamil News

முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா சஸ்பெண்ட்..!!

0

சென்னை அண்ணா பல்கலை கழக தேர்வு தாள் மறு மதிப்பீடு முறைகேட்டில் 240 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கைமாறி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த முறைகேட்டில் பல்கலை கழகத்தைச் சேர்ந்த மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

593 பொறியியல் கல்லூரிகளின் தலைமையிடமாக உள்ள சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் மூன்று லட்சத்து 2 ஆயிரம் பேர் மறு மதிப்பீடு செய்யக் கோரி விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 90 ஆயிரம் பேர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். வழக்கத்தை விட மிக அதிகமானவர்கள் மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண் பெற்றதன் பின்னணியில் முறைகேடு இருப்பதாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார், பல்கலை கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த உமா, உள்ளிட்ட பலர் முறைகேட்டில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.

போலீசார் இந்த முறைகேடு குறித்து நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்தன. அண்ணா பல்கலை கழகத்தில் ஒரு தேர்வுத்தாளை மறுமதிப்பீடு செய்ய 700 ரூபாய் கட்டணமாகும். இதில் 300 ரூபாய் ஏற்கனவே எழுதிய தேர்வு தாளை ஜெராக்ஸ் எடுத்து, அதனை மதிப்பீடு செய்யும் கட்டணம். 400 ரூபாய் மறு மதிப்பீட்டுக்கான கட்டணம்.

ஒரு மாணவர் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து அதற்கு உரிய 700 ரூபாய் கட்டணத்தை கட்டினால், அவரது விடைத்தாள் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு, அந்த பாடத்தில் திறன் பெற்ற பேராசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் அந்த விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்கு உகந்தது என்று சான்று அளித்தால், அதனை மறு மதிப்பீடு செய்யும் மையத்திற்கு அனுப்பி வைப்பார்கள். அங்கு மறு மதிப்பீடு செய்ய பல்கலைகழக தேர்வு துறையால் நியமிக்கப்பட்ட பேராசியர்கள் மறு மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் வழங்க, அதனை பல்கலை கழகம் மாணவர்களுக்கு உரிய முறையில் தெரிவிக்கும்.

அண்ணா பல்கலை கழகத்தில் நடப்பு ஆண்டில் இது போன்று மறுமதிப்பீடு செய்ய முதலில் மாணவர்களை தூண்டும் விதத்தில் சிலர் செயல்பட்டதை போலீசார் கண்டறிந்துள்ளனர். இதனால் தான் வழக்கத்தை விட அதிகமாக 3.02 லட்சம் பேர் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்ததாக போலீசார் கூறுகின்றனர்.

மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களை தொடர்பு கொண்ட தரகர்கள் சிலர் , ஒரு விடைத்தாளுக்கு 10000 ரூபாய் கொடுத்தால் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற முடியுமென ஆசை வார்த்தை காட்டி உள்ளனர். இதனால் மனம் மாறி பணம் கொடுத்த மாணவர்களே அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது போலீசாரின் குற்றச்சாட்டு.

இந்த வகையில் கடந்த 2017-ஆம் ஆண்டில் மட்டும் மறு மதிப்பீட்டு முறைகேட்டில் 40 கோடி ரூபாய் அளவுக்கு கைமாறியதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த முறைகேட்டுக்கு மைய புள்ளியாக இருந்தவர் பல்கலை கழகத்தின் முந்தைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான உமா என்பது போலீசாரின் குற்றச்சாட்டு.

உமா, தனக்கு வேண்டிய அல்லது தனது முறைகேட்டு துணை செய்யும் பேராசியர்கள் மற்றும் ஊழியர்களின் துணையோடு முறைகேட்டை அரங்கேற்றியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்காக பல்கலை கழகத்தில் அவர் பதவிக்கு வந்த பின்னர் முறைகேடு குறித்த புகார் எழுந்தது. அப்போது அவர் , விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட சுமார் 1070 பேராசியர்கள் மீது புகார் கூறி அவர்கள் 3 ஆண்டுகள் விடைத்தாள் திருத்த தடை விதித்தார். இதன் மூலம் தன்னை பழிக்கு அப்பாற்பட்டவராக காட்டிக் கொண்டார்.
இதையடுத்து முறைகேட்டுக்கு துணை செய்யும் ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணியில் அமர்த்தினர். மறு மதிப்பீடு செய்யும் பணி வழக்கமாக சென்னை அல்லது காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிலையில், அதனை திண்டிவனத்திற்கு உமா மாற்றி உள்ளார்.

இதனால் வழக்கமாக திருத்தும் பணிக்கும் வரும் ஆசிரியர்கள் வர மறுக்க, முறைகேட்டுக்கு ஒத்துழைக்கும் ஆசிரியர்களை பணியில் அமர்த்தி, அவர்களுக்கு, எந்தெந்த மாணவர்கள் பணம் கொடுத்தார்களோ, அவர்களது விடைத்தாள்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கினார் என்று போலீசார் கூறியுள்ளனர்.

இந்த முறைகேடு தொடர்பாக உமா, திண்டிவனம் கல்லூரி பேராசிரியர்கள் சிவகுமார், சுந்தர ராஜன் மற்றும் அன்புசெல்வன், பிரதீபா, பிரகதீஸ்வர், ராமேஷ் கண்ணன், ரமேஷ் உள்ளிட்ட பத்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த முறைகேட்டில் உமா அவர் பதவியில் இருந்த மூன்றாண்டு காலமும் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதும் போலீசார், இதன் மூலம் 240 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கைமாறி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறார்கள்.

இந்த முறைகேட்டில் உமாவுடன் மேலும் பலர் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதும் போலீசார், பல்கலை கழகத்தைச் சேர்ந்த மேலும் பலருக்கும் குறி வைத்துள்ளதாக கூறியுள்ளனர். முறைகேடு குறித்து உமா மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அண்ணா பல்கலை கழகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான உமாவை பேராசிரியர் பணியிலிருந்து அண்ணா பல்கலைக்கழகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. தற்போது தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் பேராசிரியை ஆக பணியாற்றி வரும் உமா மீது துறைசார்ந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதில், தேர்வு மறுமதிப்பீடு முறைகேடு குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, உமாவை பணியிடை நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேபோல, மறுமதிப்பீடு விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளான திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரி இயக்குநர் விஜயகுமார், அதே கல்லூரியில் கணிதத் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் சிவக்குமார் ஆகியோரும் அண்ணா பல்கலைக்கழகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். துறைசார்ந்த விசாரணையின் அடிப்படையில், தேர்வு மறுமதிப்பீடு முறைகேடு குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் என்பதால், இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × five =

*