;
Athirady Tamil News

மதுரை அருகே 50க்கும் மேற்பட்ட மயில்கள் விஷம் வைத்து கொலை..!!

0

மதுரை அருகே கண்மாய் பகுதியில் விஷம் கலந்த நெல்லை உட்கொண்ட 47 மயில்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

மதுரை மாவட்டம் மருதங்குளம், கொடிக்குளம் கண்மாய் மற்றும் தென்னந்தோப்பு பகுதியில் ஏராளமான மயில்கள் சுற்றித் திரிந்துள்ளன. அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் போடும் அரிசியை அவ்வப்போது வந்து இரையாக உட்கொண்டு விட்டு திரும்பிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

இந்நிலையில், இன்று மயில்களுக்கு அரிசி வைப்பதற்காக விவசாயி ஒருவர் சென்ற போது மயில்கள் வராததால் தேடி உள்ளார். அப்போது கண்மாய்ப் பகுதிக்குள் ஆங்காங்கே மயில்கள் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மயில்கள் இறந்து கிடந்த பகுதியில் வழக்கமாக ஆடுமேய்க்கச் செல்லும் மூதாட்டி ஆங்காங்கே சிறு குவியல்களாக கொட்டப்பட்டிருந்த நெல்லை நுகர்ந்த போது விஷப்பொருள் கலந்திருந்ததற்கான வாசனை வந்ததாக கூறியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த மயில்களை கைப்பற்றிய வனத்துறையினர் அவற்றை உடற்கூறாய்வுக்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். விஷம் கலந்த நெல்லை உட்கொண்டதால் மயில்கள் இறந்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருந்தாலும், உடற்கூறாய்வுக்கு பின்னரே முழுமையான விவரம் தெரிய வரும் என்று வனத்துறை அலுவலர்கள் கூறினர்.

விவசாயப் பயிர்களைக் காப்பதற்காக பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தும் விவசாயிகள், அவற்றால் வன விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் ஆபத்து ஏற்படாமல் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 9 =

*