வலி கிழக்கில் மக்கள் பங்கேற்புடன் சிரமதானம்..!! (படங்கள்)
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை சனசமூக நிலையங்களை இணைந்து சிரமதான முயற்சிகளை நேற்று வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பித்துள்ளது. இவ்வகையில் முதற்கட்டமாக புத்தூர் கலைமதி சனசமூக நிலையத்தின் சுகாதாரக் குழுவுடன் இணைந்து சுன்னாகம் – புத்தூர் வீதியின் இருமருங்கிலும் காணப்படும் பற்றைகளே சிரமதானப் பணிகள் மூலம் துப்புரவு செய்யப்பட்டுள்ளன.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் கலைமதி சனசமூக நிலையத்தின் சுகாதாரக்குழு உறுப்பினர்கள், பிரதேச சபையின் உறுப்பினர்கள், வெளிவாரி பணியாளர்கள் இச் சிரமதான முயற்சிகளில் பங்கேற்றனர்;.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் கடந்த அமர்வில் வீதிகளின் இருமருங்கிலும் துப்புரவு, மற்றம் பாதீனிய செடி ஒழிப்புத் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் இராமநாதன் ஐங்கரனினால் கேள்வி எழுப்பபப்பட்டது.
இவ் வினாவிற்குப் பதிலளித்த தவிசாளர் ‘வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையானது யாழில் காணப்படும் ஏனைய பிரதேச சபைகளைக் காட்டிலும் மூன்று மடங்கு நிலப்பரப்பினைக் கொண்டுள்ளது. அவ்வாறு காணப்படும் பல பகுதிகளின் வீதியோரங்கள் தனியே பிரதேச சபையின் மட்டுப்படுத்தப்பட்ட ஆளணி மற்றும் வளங்களுடன் துப்புரவு செய்யப்பட முடியா நிலை காணப்படுகின்றது. இந் நிலையில் நாம் சனசமூக நிலையங்களை உள்வாங்கி மக்கள் பங்கேற்புடனான சிரமதானத்தினை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்வதாக’ உத்தரவதமளித்திருந்தார்.
இச் சபை அமைந்த பின்னர் சில உறுப்பினர்கள் ஏற்கனவே சிரமதான முயற்சிகளுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் அவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் பிரதேச சபையின் வெளிவாரி பணியாளர்கள் தினமும் ஏதோ ஒருபகுதியைச் சுத்தம் செய்துவருகின்றனர். சுமார் 104 சதுரக் கிலோ மீற்றருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் சபை உறுப்பினர்கள் மேலும் சிரமதானங்களை ஒழுங்கமைக்கும் பட்சத்தில் அதனை தான் வரவேற்பதுடன் அதற்கான ஏற்பாhடுகளையும் செய்து தருவதாக தவிசாளர் கேட்டுக்கொண்டார்.
இதனடிப்படையில் கதிர்த்திகேசு கதிர்காமநாதன் தன்னுடைய ஒழுங்கமைப்பின் கீழ் கலைமதி சனசமூக நிலையத்தின் கீழ் இயங்கும் சுகாதரக்குழுவினர் முன்னுதாரணமாக புத்தூர் சுன்னாகம் வீதிப்பகுதியில் சிரமதானத்தினைச் செய்ய முன்வருவதாக சபையில் விருப்பம் தெரிவித்திருந்தார். இவ்வாறாக மக்கள் பங்கேற்புடன் சிரமதான முயற்சிகள் இடம்பெறுவதை பலரும் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.