;
Athirady Tamil News

மோடி திறமையற்ற ரெயில் டிரைவர் – ராகுல்காந்தி கடும் தாக்கு..!!

0

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற இல்லத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பேசும்போது கூறியதாவது:-

நல்ல நாட்கள் வரும் என்று பா.ஜனதா அரசு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஆளும் கட்சிக்கு எதிராக மக்களின் கோப அலை வீசுகிறது. மோடி அரசுக்கு எதிராக மாற்றத்தை ஏற்படுத்த நமது எம்.பி.க்கள் கடுமையாக உழைக்கவேண்டும். காங்கிரசையும் அதன் கூட்டணி கட்சிகளையும் மோடி அரசை வீழ்த்தும் மாற்று சக்தியாக நம்மை மக்கள் பார்க்கின்றனர்.

எனவே மக்களின் பிரச்சினைகளை நாம் புரிந்து கொண்டு வறுமை ஒழிப்பு, வேலையில்லா திண்டாட்டம், நாட்டில் நிலவும் சமத்துவமற்ற நிலை போன்றவற்றுக்கு தீர்வு காணவேண்டும். இதைச் செய்யவேண்டிய மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது.

இது ஜனநாயகம் மற்றும் சமூக நீதியை பாதுகாக்கும் சக்திகளுக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையே நடைபெறும் மிகப்பெரிய போராட்டம். இதில் நாம் வெற்றி பெற்றாகவேண்டியது மிக அவசியம்.

வெறுப்பு அரசியல், மக்களிடையே பிளவை ஏற்படுத்துதல், வன்முறை, அரசியல் சாசனத்தை இஷ்டம்போல் வளைக்கும் சக்திகளுக்கு எதிராக நாம் செயல்படுவதை மக்களிடம் உறுதி செய்து, பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கவேண்டும்.

ஏனென்றால் மோடியின் ஆட்சியில், ஆட்சி நிர்வாகம் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. மத்திய அரசு திறன் அற்றதாக உள்ளது. ஊழல் உச்சக்கட்டத்தை அடைந்து விட்டது. பொருளாதாரம் படு வீழ்ச்சி கண்டுள்ளது. மக்களை சமூக ரீதியாக பிளவு படுத்துவதும் வேகமாக பரவி வருகிறது.

நாட்டு மக்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழ்மை உழலும் குடும்பத்தினரிடையே நமது எம்.பி.க்கள் நம்பிக்கையை உருவாக்கவேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் கடன் சுமை காரணமாக மக்களின் வாழ்க்கை நசுக்கப்பட்டு விட்டது. இதற்கு நிவாரணம் கிடைக்கும் விதமாக நாம் செயல்படவேண்டும். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பும், தலித்துகளுக்கு நீதி கிடைப்பதையும் உறுதி செய்யவேண்டும்.

நான் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஊழலை ஒழிப்பேன் என்று மோடி கூறினார். ஆனால் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரூ.1.3 லட்சம் கோடி அளவிற்கு மக்களின் பணம் சுருட்டப்பட்டு உள்ளது. கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு பெரும் தொழில் அதிபரை காப்பாற்றுவதற்காக இந்த ஊழலில் மோடி அரசு ஈடுபட்டு இருக்கிறது.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையில் இருந்து 150 சதவீத லாபம் கிடைக்கச் செய்வோம் என்று மோடி உறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மோடி, எனக்கு வாக்களியுங்கள் உங்களது சாதாரண வாழ்க்கைப் பயண ரெயிலை, மந்திர ரெயிலாக மாற்றி உங்கள் பயணம் சுகமாகவும், சிறப்பாகவும் அமைய பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் 4 ஆண்டுகளாகியும் இது நடக்கவில்லை. மாறாக ஒரு சர்வாதிகாரி போல் மாறி பேரழிவை நோக்கி இயக்கும் திறமையற்ற டிரைவராக மோடி திகழ்கிறார்.

தனது மந்திர ரெயிலில் பயணம் செய்யும் மக்கள் மீது தனக்கு பொறுப்பு இருப்பதை அவர் கொஞ்சமும் உணரவில்லை. எனவே இனியும் மக்களை மோடி முட்டாளாக்க முடியாது. மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி விட்டார்கள்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜனதாவும் ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் ஒவ்வொரு கட்டமைப்பும் குறி வைத்து தாக்கப்படுகிறது. அதை தடுக்கவேண்டும். நாட்டின் கட்டமைப்புகள் அனைத்தும் மக்களின் குரலாக இருக்கவேண்டும். அதற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × one =

*