;
Athirady Tamil News

மோகன்லாலை சுடுவது போல சைகை காட்டிய நடிகரால் பரபரப்பு..!!

0

மலையாள பட உலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்லால். இவர் சமீபத்தில் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பாக நடைபெற்ற நடிகர் சங்க கூட்டத்தில் நடிகை கடத்தல் வழக்கில் கைதான நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் திலீப் நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்க்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் திலீப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக மோகன்லால் மீது நடிகைகள் சிலர் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கேரள அரசின் சார்பில் சிறந்த நடிகர்- நடிகைகளுக்கு விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக மோகன்லால் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது போன்ற விழாக்களில் முதல்வர் தான் முக்கியமானவர். அவருக்கு அடுத்தபடியாக விருது பெறுபவர்கள் தான் முக்கியத்துவம் பெற்றவர்கள். விருது பெறாதவர் எப்படி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கலாம் என்று எதிர்ப்பார்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் நேற்று திருவனந்தபுரத்தில் சினிமா விருது வழங்கும் விழா கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்தது. இதில் கேரள மந்திரிகள், விருது பெறும் நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர்.

சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்ட பார்வதிக்கும், சிறந்த நடிகர் இந்திரன்ஸ் உள்பட பலருக்கு பினராயி விஜயன் விருதுகளை வழங்கினார்.

எதிர்ப்பு எழுந்த நிலையில் மோகன்லால் இந்த விழாவில் கலந்து கொள்வாரா? என்ற பரபரப்பு நிலவியது. ஆனால் மோகன்லால் இதில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசும் போது கூறியதாவது:-

எனக்கு மிகவும் பிடித்த இந்த மண்ணில் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. படித்தது, வளர்ந்தது இந்த திருவனந்தபுரம் மண்ணில் தான். என் வாழ்க்கையில் பல நல்ல சம்பவங்கள் மகிழ்ச்சியான தருணங்கள் இங்கு தான் நடந்துள்ளது. எனது தந்தை திருவனந்தபுரத்தில் அரசு ஊழியராக பணியாற்றிய போது அவரது கை பிடித்து நான் இந்த வழியாக நடந்துச் சென்றுள்ளேன்.

எனது தாயுடன் கோவிலுக்கும் இந்த வழியாகத்தான் சென்று உள்ளேன். திருவனந்தபுரத்தில் தான் எனது திருமணமும் நடந்தது. முதல் சினிமா சூட்டிங்கும் இங்கு தான் நடந்தது.

அப்படிப்பட்ட இடத்தில் எனது சக நடிகர்- நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வது எனது உரிமையாகும். இதற்கு எனக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.

40 வருடமாக இந்த சினிமாவில் நான் உள்ளேன். சினிமாவில் யார் விருது பெற்றாலும் எனக்கு மகிழ்ச்சி தான். அவர்களை பாராட்டுவது எனது கடமை, உரிமையாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மோகன்லால் பேசிக் கொண்டிருந்த போது சிறந்த துணை நடிகருக்கான விருது பெற்ற அலன்சியர் என்ற நடிகர் மேடையின் முன்பகுதிக்குச் சென்று தனது கையை துப்பாக்கி போல மடக்கி மோகன்லாலை நோக்கி 2 முறை சூடுவது போல சைகை காட்டினார்.

மேலும் மோகன்லால் பேசுவது அனைத்தும் பொய் என்றும் அவர் ஆவேசமாக கூறினார். அதே சமயம் மோகன்லால் அதைப் பொருட்படுத்தாமல் சிரித்தபடி மேடையில் நின்றார்.

முதல்-மந்திரி பினராயி விஜயன் பங்கேற்ற விழாவில் அவர் இப்படி நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அங்குச் சென்று அந்த நடிகரை அங்கிருந்து அகற்றினார்கள். அதன்பிறகு விருது வழங்கும் விழா தொடர்ந்து நடைபெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 4 =

*