;
Athirady Tamil News

பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் – பிரதமர் மோடி உறுதி..!!

0

பிரதமர் நரேந்திர மோடி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ஒருவருக்கொருவர் அவநம்பிக்கை கொண்ட எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து மெகா கூட்டணி அமைக்க முயற்சித்து வருகின்றன.

ஏற்கனவே அரசியல் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் இது போன்ற கூட்டணிகள் அமைந்து அவை தோல்வியில் முடிந்துள்ளன.

இந்த கசப்பான அனுபவங்களை ஏற்கனவே மக்கள் பெற்று இருக்கிறார்கள். எனவே, மோடியை வெளியேற்ற வேண்டும் என்ற திட்டத்தில் அவர்கள் ஒன்று சேர்வதை மக்கள் புறக்கணிப்பார்கள்.

எதிர்க்கட்சிகள் அமைக்கும் மெகா கூட்டணி மக்களிடம் எடுபடாது. அந்த கூட்டணி என்பது தோல்வி திட்டம். இதன் மூலம் அவர்கள் மக்களோடு கூட்டணியை ஏற்படுத்த முடியாது.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் எங்களின் கொள்கை வளர்ச்சி, விரைவான வளர்ச்சி, அனைவருக்கும் வளர்ச்சி என்பதாக இருக்கும்.

நாங்கள் கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலை விட வரும் தேர்தலில் இன்னும் கூடுதல் இடங்களை கைப்பற்றுவோம். பா.ஜனதா கூட்டணியில் இதுவரை பெற்ற இடங்களை விட அதிக இடங்களை பெற்று பழைய எங்கள் சாதனைகளை முறியடிப்போம்.

இந்தியாவில் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுபவர்களுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்காக புதிய சட்டத்தையும் கொண்டு வந்துள்ளோம். இந்த சட்டத்தின் மூலம் இனி பொருளாதார குற்றங்களை செய்து மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் பாயும்.

ரபேல் போர் விமானம் கொள்முதல் தொடர்பாக திட்டமிட்ட பொய் பிரசாரங்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து செய்து வருகின்றன. இது, இந்திய அரசும், வெளிநாட்டு அரசும் நேரடியாக போட்ட ஒப்பந்தம்.

வெளிப்படை தன்மையுடனும், நேர்மையுடனும் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்வது நாட்டின் நலனுக்கு குந்தகத்தை ஏற்படுத்தும்.

எங்கள் அரசு ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. 2017 செப்டம்பர் மாதத்தில் இருந்து 2018 ஏப்ரல் மாதம் வரை மட்டுமே 45 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறோம்.

கடந்த ஆண்டில் மட்டும் 70 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருப்பதாக தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

சுற்றுலா, முத்ரா கடன் திட்டம் போன்றவற்றின் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தனி நபர்களை கும்பலாக அடித்து கொல்வது, பசுவதை விவகாரத்தில் மனிதர்களை கொல்வது போன்ற சம்பவங்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

எங்கள் அரசு இதில் கடுமையான சட்டங்களையும், விதிமுறைகளையும் கொண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

ஒவ்வொரு தனி மனிதனுக்கும், சுதந்திரமும், பாதுகாப்பும் இருக்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து கொள்ளக்கூடாது. இந்த விவகாரங்களில் நாங்கள் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

அசாம் தேசிய குடியுரிமை பதிவேடு விவகாரம் என்பது நாங்கள் கொடுத்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றி இருக்கிறோம்.

1972 மற்றும் 1982-ல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் குடியுரிமை பதிவேடு தயாரிக்கப்பட்டது.

ஆனால், இப்போது இதை வைத்து காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறது. தவறான குற்றச்சாட்டுகளை அவர்கள் கூறுகிறார்கள்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 7 =

*