;
Athirady Tamil News

‘சட்டவிரோதமான கடற்றொழில்களை நிறுத்துவேன்’..!!

0

முல்லைத்தீவு மீனவர்கள், கடந்த 10 நாள்களாக முன்னெடுத்துவந்த தொடர்போராட்டம், மீன்பிடித்துறை அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சாவின் உறுதிமொழியை அடுத்து, நேற்று (12) கைவிடப்பட்டது.

சட்டவிரோதமான கடற்றொழில்களைத் தடுத்து நிறுத்தி, எமது மீன்பிடித் தொழிலை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் முன்பாக, கடந்த 2ஆம் திகதி முதல், மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மீனவர்களின் கோரிக்கை தொடர்பில் நேரடியாகக் கேட்டறிவதற்காக, மீன்பிடித்துறை அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா, களத்துக்கு விஜயம் செய்து, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில், மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, டக்ளஸ் தேவானந்தா, எம்.ஏ. சுமந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா, சி.சிவமோகன், ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வட மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் க.சிவநேசன், வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன் மீன்பிடித் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் மீனவ அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, தாங்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில், மீனவ அமைப்பின் பிரதிநிதிகள் தெளிவுபடுத்தினர். அதன்பின்னர், மீனவர்களின் பிரச்சினை தொடர்பில், அரசியல் பிரமுகர்களும் எடுத்துரைத்தனர்.

அவ்விரு தரப்பினர்களின் கோரிக்கைகளுக்கும் செவிசாய்த்த அமைச்சர் விஜித் விஜயமுனி, சட்டவிரோதமான கடற்றொழில்களை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக, உத்தரவாதமளித்தார். அதனைவிட இப்போது வழங்கப்பட்டுள்ள அனுமதிகள் யாவும் தற்காலிகமாகத் தடை செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

“இந்த விவகாரம் தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு, அக்குழுவே, ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளது. அதுவரையிலும் அந்த அனுமதிகள் யாவும் தடை செய்யப்பட்டுள்ளன” என அமைச்சர் உறுதிமொழி வழங்கினார். அதனையடுத்தே, தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைத்த நிலையில், மக்கள் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − four =

*