;
Athirady Tamil News

ஆகஸ்ட் 15 ஒவ்வொரு இந்தியனுக்கும் புனிதமான நாள் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்..!!

0

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தனது சுதந்திர தின உரையில், ஆகஸ்ட் 15-ம் தேதி ஒவ்வொரு இந்தியனுக்கும் புனிதமான நாள் என நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ராம்நாத் கோவிந்த் உரை ஆற்றினார். அதில் அவர் கூறியதாவது:-

ஆகஸ்ட் 15-ம் தேதி ஒவ்வொரு இந்தியனுக்கும் புனிதமான நாளாகும், நமது நாட்டை மூவர்ணக்கொடி பிரதிபலிக்கிறது. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடங்குவதால், இந்த ஆண்டு சுதந்திர தினத்துக்கு வழக்கத்துக்கு மாறான முக்கியத்துவம் உள்ளது. மகாத்மா காந்தி, கண்டம் விட்டு கண்டம் நினைவுகூரப்படும் மனிதராக திகழ்கிறார்.

அவர் இந்தியாவின் அடையாளம். அவரது அகிம்சை கொள்கை இன்றும் பொருத்தமாக உள்ளது. வன்முறையை விட அகிம்சைக்கு பலம் அதிகம் என்று அவர் காண்பித்தார். அவரது கொள்கைகளை நமது அன்றாட பணிகளில் பின்பற்ற வேண்டும்.

ராணுவ வீரர்களின் தியாகத்தினால் தான் நமக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றது, இன்றைய தினத்தில் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்கள் அனைவரையும் நினைவு கூர்கிறேன். பாதுகாப்பு படை எப்போதும் தயார் நிலையில் உள்ளதால் நாட்டின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பெண்கள் வாழக்கையில் முன்னேற அவர்களுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பெண்கள், தாம் விரும்பிய வாழ்க்கையை வாழும் உரிமை பெற்றவர்கள். கல்வி பணி ஆகியவற்றில் பெண்கள் தங்களுக்கான பாதையை தேர்வு செய்ய நாம் அனுமதிக்க வேண்டும்.

நாடு இப்போது முக்கியமான தருணத்தில் இருக்கிறது. நீண்ட காலமாக காத்திருக்கும் இலக்குகளை அடைய வேண்டி உள்ளது. இந்த நேரத்தில், சர்ச்சைக்குரிய விஷயங்களும், தேவையற்ற விவாதங்களும் நம்மை திசைதிருப்ப நாம் அனுமதிக்கக்கூடாது.

தனது பணிகளை உண்மையுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செய்யும் ஒவ்வொரு இந்தியனும் சுதந்திர போராட்ட மாண்புகளை கட்டிக்காப்பதாகவே அர்த்தம். ஏழைகள் வறுமையில் இருந்து விடுபட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

நாடு அடைந்து வரும் வளர்ச்சியும், மாற்றத்தின் வேகமும் பாராட்டுக்குரியது. இந்தியா, அரசாங்கத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல, இந்திய மக்களுக்கும் சொந்தமானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + 12 =

*