;
Athirady Tamil News

மினி சூறாவளியால் சிறுப்பிட்டியிலும் பெரும் பாதிப்பு -தவிசாளர் நேரில் ஆராய்வு..!!

0

மினி சுறாவளியின் தாக்கத்தினால் சிறுப்பிட்டி ஜனசக்தி குடியிருப்பு பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை மாலை மழையுடன் கூடிய திடீர் காற்று வீசியது. இதன் தாக்கத்தினால் வீடுகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பெருந்தொகையான பப்பாசி மற்றும் வாழை மரங்களும் வலிகிகழக்கின் பல பகுதிகளிலும் அழிவடைந்துள்ளன.

இது பற்றி தெரிய வருவதாவது, வீசிய திடீர் சூறாவளி காரணமாக சிறுப்பிட்டி ஜனசக்தி குடியிருப்புப் பகுதியில் பனை மரம் ஒன்று முறிவடைந்து வீடென்றின் கூரையின் மீது வீழ்ந்ததில் அவ் வீடு பாரியளவில் சேதமடைந்துள்ளது. இதேவேளை மேலும் சில வீடுகளின் சீற்கள் காற்றின் வேகத்தினால் உடைவடைந்துள்ளன. இவ்வாறாக வீட்டுக்கூரைகள், கொங்கிறீட் சுவர்கள் உடைந்து விழுந்தபோதும் குடியிருப்பாளர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

இதுபோன்று சிறுப்பிட்டிப் பகுதியில் பெறுமதியான விவசாயச் செய்கைகளும் அழிவடைந்துள்ளன. பெறுமதி மிக்க வாழை, பப்பாசி போன்ற பயிர்கள் கடும் காற்றின் காரணமாக முறிவடைந்துள்ளன. இவ்வாறாக அழிவடைந்த சொத்துக்களின் சேத விபரங்கள் இதுவரை மதிப்பிடப்படாதபோதும் விவசாயிகள் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் செல்வதிசைநாயகம் தவநாயகம் ஆகியோர் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

பிரதேச சபைத் தவிசாளர் அப்பகுதியில் காணப்படும் அபாயகரமான மரங்களை அகற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதுடன் மக்களின் பாதிப்புக்களை நிவர்த்திக்கும் கடமைப்பொறுப்புள்ள நிறுவனங்களின் கவனத்திற்குக் கொண்டுவரவும் உள்ளதாக மக்களிடம் உத்தரவாதமளித்துள்ளார்.

எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முன்னுரிமையளிக்குமாறும் வலி கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரிடம் மக்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் யாழ்.குடாநாட்டில் காற்றின் வேகம் அதிகரித்துக்காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × three =

*