;
Athirady Tamil News

கேரளாவில் மழை பாதிப்பு – 4 லட்சம் மக்கள் முகாம்களில் தஞ்சம்..!!

0

கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. மழை பெய்த பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

வயநாடு, குட்ட நாடு, பாண்டநாடு பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள், நிலச்சரிவில் சிக்கி புதைந்தன. சாலைகள் அடியோடு நாசமானது. சிறு பாலங்களும் உடைந்து நொறுங்கியது.

இடுக்கி, மலப்புரம், காசர் கோடு, கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, எர்ணா குளம், பத்தனம் திட்டா ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன.

இங்குள்ள கிராமங்கள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்டு தனித்தீவுகள் போல் மாறியது. வீடுகளிலும் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெளியேற வழியின்றி தவித்தனர். அவர்கள் மொட்டை மாடிகளிலும், வீடுகளின் மேல் தளத்திலும் நின்றபடி உதவிக்கேட்டு கதறினர்.

மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவத்தின் முப்படையும் களம் இறக்கப்பட்டது. இவர்களுடன் தேசிய பேரிடர் மீட்புக்குழு, கடலோர காவல் படை, தீயணைப்புத்துறை, எல்லை பாதுகாப்புப்படை வீரர்களும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

செங்கனூர், பாண்டநாடு, வெண்மணி, ஆலுவா, பரவூர், காலடி பகுதிகளுக்கு மீட்புப்படையினர் செல்ல முடியாத அளவுக்கு வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இங்கு ஹெலிகாப்டர்களில் சென்ற வீரர்கள், பெண்கள், குழந்தைகளை மீட்டு வந்தனர்.

கொச்சி மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் சிக்கினர். அவர்கள் ரப்பர் படகுகள், மீன்பிடி வள்ளங்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட மக்களை தங்க வைக்க மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.

நேற்று ஒரு நாளில் மட்டும் 2 லட்சம் பேர் நிவாரண முகாம்களுக்கு வந்தனர். இதில் குழந்தைகள், முதியவர்கள், பெண்களே அதிகம் பேர் இருந்தனர். இவர்களில் நோயாளிகள் ஆம்புலன்சு மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

கேரளாவின் 14 மாவட்டங்களிலும் திறக்கப்பட்ட நிவாரண முகாம்களில் இதுவரை 4 லட்சம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களை தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமும் பல முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

ஊர் பிரமுகர்கள் வீடுகளிலும், தேவாலயங்கள், பள்ளி வாசல்களிலும் பலர் தங்கி இருக்கிறார்கள். நேற்று ஒருநாளில் மட்டும் முப்படை வீரர்கள் மூலம் 50 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர்.

இன்றும் மீட்புப்பணி தொடர்கிறது. இதிலும் ஆயிரக்கணக்கானோர் மீட்கப்படுவார்கள். இதன் மூலம் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.

நிவாரண முகாம்களில் இருப்போருக்கு சமூக நலத் துறை மூலம் உணவு பொட்டலங்கள், தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சமூக ஆர்வலர்களும் பெண்கள், குழந்தைகளுக்கு தேவையான உடைகள், சானிட்டரி நாப்கின்கள் போன்றவற்றை வழங்கி வருகிறார்கள்.

ஆனாலும் பலருக்கு போதுமான உணவும், குடிநீரும் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டனர். ஊரெங்கும் வெள்ளம் தேங்கி நிற்க, ஒரு வாய் தண்ணீர் குடிக்க வழியில்லையே என்று அவர்கள் கண்ணீர் விட்டனர்.

கேரளத்தின் பரிதாப நிலையை பார்வையிட நேற்று பிரதமர் மோடி திருவனந்தபுரம் வந்தார். அங்கிருந்து கொச்சி சென்று முதல்-மந்திரி பினராய் விஜயனுடன் ஆலோசனை நடத்தினார்.

நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த வாகனங்கள்.

பின்னர் ஹெலிகாப்டரில் சென்று வெள்ளப்பாதிப்பை பார்வையிட்டார். தொடர்ந்து கேரளாவிற்கு ரூ.500 கோடி நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்தார். மேலும் கேரளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.

கேரளாவில் பெய்து வரும் பெருமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலைகள் முதல் கிராமச்சாலைகள் வரை அனைத்தும் நாசமாகி விட்டது. இதனால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருவதில் கூட சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே போக்குவரத்தை சீரமைக்க முன்னுரிமை கொடுத்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. ராணுவத்தினரும் பழுதான பாலங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் மழை தொடங்கி 11 நாள் ஆகியும் இன்னும் 2 நாட்களுக்கு மழை அபாயம் இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் எர்ணாகுளம், ஆலுவா, மலப்புரம், வயநாடு, இடுக்கி மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில்தான் ஏராளமான அணைகள் உள்ளன. மழையால் அவை மீண்டும் மீண்டும் நிரம்பி வருகிறது. எனவே அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வெள்ளம் வெளியேற்றப்பட்டால் இந்த மாவட்டங்களில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது மாவட்ட மக்களை பீதிக்கு ஆளாக்கி உள்ளது.

கேரளாவில் தொடரும் சோகத்தில் இருந்து மக்களை மீட்க மேலும் கூடுதல் மீட்புப் படையினரை அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இன்று 5 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிக்கு வந்துள்ளது.

ஒடிசா, தமிழ்நாட்டில் இருந்தும் தீயணைப்புப்படை வீரர்கள், ரப்பர் படகுகள் கேரளாவிற்கு சென்றுள்ளனர். அவர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுகிறார்கள்.

கேரளாவில் கடந்த 8-ந் தேதி பெருமழை தொடங்கும் முன்பே மழையால் 34 பேர் பலியாகி இருந்தனர். அதன் பிறகு பெய்த பேய் மழைக்கு 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + fourteen =

*