;
Athirady Tamil News

அறுவை சிகிச்சைக்காக சேர்த்த பணத்தில் ரூ.5 ஆயிரம் கேரளாவுக்கு வழங்கி நெகிழ வைத்த சிறுமி…!!

0

கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் கடந்த 7-ந்தேதி தொடங்கிய வரலாறு காணாத மழை அந்த மாநிலத்தையே புரட்டிப்போட்டிருக்கிறது.

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளது. அனைத்து பகுதிகளில் இருந்தும் உணவு, உடை, நிவாரண பொருட்களை வாரி வழங்கி கொண்டிருக்கிறது. திரையுலனரும் தங்கள் பங்கிற்கு நிதியுதவியை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தனது இருதய அறுவை சிகிச்சைக்காக வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் திரட்டிய பணத்தில் ரூ.5 ஆயிரத்தை கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கி நெகிழச்செய்திருக்கிறார் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அட்சயா என்ற சிறுமி.

கரூர் மாவட்டம், தான் தோன்றிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட குமரபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன்-ஜோதிமணி தம்பதியினர். இவர்களது மகள் அட்சயா. அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

தந்தை இறந்துவிட்ட நிலையில் அவரது தாய் ஜோதிமணி அங்குள்ள ஒரு சத்துணவு மையத்தில் உணவு சமைத்து கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் மகளை வளர்த்து வருகிறார்.

பிறவியிலேயே அட்சயாவுக்கு இருதயத்தில் கோளாறு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் அதற்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ள வழியின்றி தவித்த அவரது பெற்றோர் பலரது உதவியை நாடினர். கடந்த ஆண்டு உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட அட்சயாவின் பெற்றோருக்கு கரூரைச் சேர்ந்த இணைந்த கைகள் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலி உதவினார்.

சமூக வலைத்தளங்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி மூலம் சென்னையில் அட்சயாவுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. மறுபடியும் ஒரு வருடத்துக்குள் இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் அந்த ஆபரே‌ஷனுக்காக நிதி திரட்டப்பட்டது.

இதுவரை ரூ.20 ஆயிரம் வரை நிதி கிடைத்துள்ளது. இதற்கிடையே கேரள வெள்ள பாதிப்பையும் அங்கு மக்கள் பரிதவிப்பதையும் பார்த்து இதயம் கசிந்த அட்சயா, தனக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காகக் கிடைத்த பணத்தில் ரூ.5 ஆயிரத்தை கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கி நெகிழச் செய்திருக்கிறார்.

மக்கள் பாதை என்ற அமைப்பு மூலம் இந்தத் தொகை கேரளாவுக்கு அனுப்பப்பட இருக்கிறது. அந்த அமைப்பின் கரூர் நகரப்பொறுப்பாளர் ஜெய் சுந்தரிடம் ரூ.5 ஆயிரத்தை அட்சயா வழங்கினார்.

இதுகுறித்து அட்சயா கூறுகையில், எனக்கும் இப்படி பலர் உதவித்தான், நான் இன்றைக்கு உயிரோடு இருக்கிறேன். மறுபடியும் எனக்கு ஆபரே‌ஷன் செய்யவும், பலர் பணம் அனுப்புறாங்க. கேரளாவில் வெள்ளத்தையும், அங்கே என்னை போல எத்தனையோ சிறுமிகள் தவிப்பதையும் டி.வி.யில் பார்த்தேன். மனசு தாங்கலை. அதனால் தான், எனக்கு ஆபரே‌ஷன் செய்ய வைத்திருந்த பணத்தில் கொஞ்சத்தை எடுத்து, அவங்களுக்கு கொடுத்திருக்கேன் என்றார்.

மேலும் இந்த தகவல் சிறுமி அட்சயாவுக்கு பெருமளவில் வாழ்த்துக்களையும், ஆதரவையும் அளித்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 4 =

*