;
Athirady Tamil News

இழுவைப் படகு விவகாரத்தில் இந்தியாவை பகைக்க முடியாது..!!

0

இந்திய இழுவைப் படகு விவகாரம் இந்தியாவை பகைக்க முடியாது என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் துறை அமைச்சர் விஜித் விஜயமுணி சொய்சா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் துறை அமைச்சர் விஜித் விஜயமுணி சொய்சா யாழ். மாவட்ட கடற்றொழில் சங்கத்தினரை நேற்று (21) இரவு யாழ். ரில்கோ சிற்றி ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலின் போது யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தினர் தமது பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்ததுடன், தமது தேவைகள் தொடர்பாகவும் எடுத்து கூறினார்கள்.

கடற்றொழிலாளர் சங்கத்தினரின் கோரிக்கைகளை செவி மடுத்த அமைச்சர், பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த காலத்தில் ஏற்பட்டிருந்த யுத்த சூழ்நிலை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். வட பகுதியில் அரசியல், சமூக, பொருளாதாரம் கலாசார ரீதியாகவும், பல வகையிலும் பின்னடைவினை எதிர்நோக்கியிருந்தார்கள். வட பகுதியில் வாழ்ந்த மக்கள் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். நம்பிக்கை இழந்தவர்களாக இருந்ததுடன், எதிர்காலம் பற்றி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாத கால கட்டத்தினை கடந்து வந்துள்ளார்கள். எனவே தார்மீக ரீதியாக பார்க்கப்பட வேண்டிய விடயம். வடகிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் இந்தப் பிரதேசங்கள் முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட இந்த மக்கள் மத்தியில் நல்லாட்சியை ஏற்படுத்த ஜனாதிபதியும், பிரதமரும் இயன்ற அளவு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

மக்கள் சுபீட்சத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கான சூழலை உருவாக்கியுள்ளோம். இந்த நிலமைகளில் தாக்கங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் தெளிவாக உள்ளது.

இந்திய செலவாணியைப் பெற்றுத் தரும் கடலட்டை தொழில் வளர்ச்சியடைய வேண்டும். கடலட்டை தொழிலை எமக்கு சாதகமான முறையில் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.

மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பாரிய பிணக்குகள் இருக்கின்றதை மறுக்கவில்லை. ஓரே நேரத்தில் தீர்த்து வைக்க முடியாது. அனைத்து மீனவ சங்கத்தினரையும் அழைத்து கருத்துப் பரிமாற்றத்தினை ஏற்படுத்தி, அதன் ஊடாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கு ஏற்றவகையில், முதலாவதாக யாழ். மாவட்டத்தனைத் தெரிவு செய்வதாகவும் கூறினார்.

யாழ். மாவட்டத்தில் 5 துறைமுகங்களை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறியதுடன், 20 இடங்களில் இறங்குதுறைகளையும், ஆழப்படுத்தப்படவுள்ள பகுதிகளையும் அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளோம். அந்த இடங்களை தெரிவு செய்யுமாறும், தொழில்நுட்ப ரீதியாக செய்ய வேண்டிய விடயங்களை அமைச்சு நடைமுறைப்படுத்தும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் பிரச்சினை கூறப்பட்டது. இந்த வருடத்தில் 17 இந்திய மீனவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளோம். 87 படகுகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா எமக்கு சமீபமாக இருக்கக்கூடிய ஒரு நாடு. வரலாற்று ரீதியாக எம்முடன் பல தொடர்புகளைக் கொண்டுள்ள ஒரு அயல்நாடு. இந்தியாவில் இருந்து தான் புத்த சமயம் இலங்கைக்கு வந்தது. இந்து மதமும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மத வழிபாடுகளை இங்கு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் எமக்கும் நீண்டகால தொடர்புகள் இருப்பதனால், மீனவர்களின் பிரச்சினைகளைத் தொடர்புபடுத்தி இந்தப் பிரச்சினைகளை திசை திருப்ப முயற்சிக்க கூடாது. இந்திய அரசாங்கத்துடனும், இந்த மீனவ அமைப்புக்களுடனும் சுமூகமான பேச்சுக்களை நடாத்துவோம். அத்துமீறும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுப்போம். ஒரு இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி நல்லிணக்கத்தினை உருவாக்க வேண்டுமென்பதே எமது நோக்கம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 12 =

*