;
Athirady Tamil News

யாழ் மக்களை ஏமாற்றும் இன்சூரன்ஸ் கொம்பனி..!! (முகநூலில் இருந்து)

0

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை 8.30

ரிங்… ரிங்… ரிங்… ரிங்….

“ஹலோ ….. இன்சூரன்ஸ் கொம்பனிதானே” -நான்

“யா… கவுத கத்தா கரன்ன” -பெண்குரல்

“தெமிழ காத்தா கரன்ட புளுவன்த”- நான்

“சுட்டக் கின்ன”- அதேகுரல்
தொலைபேசி லைன் வேறுபிரிவுக்கு மாற்றப்பட்டது.

“ஹலோ நான் யாழ்ப்பாணம் சுழிபுரம் சந்தியிலிருந்து கதைக்கிறேன்…”

“ஆமா சொல்லுங்க சேர் என்ன நடந்தது”- இனிமையான பெண்குரலொன்று தமிழில்

“எனது மோட்டார் சைக்கிள் விழுந்ததன் காரணமாக முன் மட்காட் சேதமடைந்துவிட்டது. புல் இன்சூரன்ஸ் பண்ணியிருக்கிறேன்.”

“ஓகே. நான் இன்னொரு இலக்கம் தாறன் அதில கொன்ராக்ட் பண்ணுங்க”

“சரி தாங்கோ”- நான்
இலக்கம் சொன்னார். எழுதிக்கொண்டேன்.

மீண்டும் தந்த இலக்கத்துக்கு அழைக்கிறேன்.
“ஹலோ…”

“ஹூ ஆ ஸ்பீக்கிங்?”- இதுவுமொரு பெண்குரல். ஆனால் தமிழில் பேசியதுபோல இனிமையாய் இல்லை.

“கான் யூ ஸ்பீக் இன் ரமில்?”- நான்.

“நோ ஐ கான்ற்”- அதே பெண்குரல்

ஆங்கிலத்திலேயே உரையாடல் தொடர்ந்தது…
நடந்ததை விளக்கினேன்.விளங்கிக் கொண்டதும் மோட்டார் சைக்கிள் இலக்கம். சாரதி அனுமதிப்பத்திர இலக்கம். தொலைபேசி இலக்கம் என்பனவற்றை கேட்டுப் பெற்றுக்கொண்டார். அவரே தொடர்ந்து…

“ஓகே. அந்த இடத்திலேயே காத்திருங்கள். உங்கள் தொலைபேசி இலக்கத்துடன் ஒருவர் தொடர்பு கொள்வதுடன் அவ்விடத்துக்கும் வருவார். சேதத்தின் மதிப்பீட்டை கராஜ் ஒன்றில் பெற்றுக் கொள்வதுடன் சேதமடைந்துக்காக புதிய பாகமொன்று தர நடவடிக்கை எடுப்பார்”.

“தாங்யூ மெடம்”- பூரித்தபடி சொன்னேன்.
தொடர்பு துண்டிக்கப்பட்டது.

* * *

காத்திருக்கத் தொடங்கினேன். அழைப்பைக் காணோம்

நேரம் காலை 9.30 ஐத் தாண்டத்தொடங்கியது.

கவிஞர் வைரமுத்து வலுக்கட்டாயமாக ஞாபகத்துக்கு வந்தார்.

“காத்திருந்துபார்.
நிமிடங்கள் வருஷமென்பாய்” – உணர்ந்தேன்

காத்திருந்து களைத்துப்போனேன்…
நேரம் 9.45
சரி நேரில்தான் வரவேண்டாம். அழைப்பெடுத்தாவது அறிவுறுத்தல் வழங்கலாமே! உங்கள் கம்பனியை நம்பி சுளையாக 5500/= புல் இன்சூரன்ஸ் அல்லவா கட்டி அழுதிருக்கிறேன். அதுவும் அதைக் கட்டாவிட்டால் வரிஅனுமதிப்பத்திரம் எடுக்க முடியாதென்று வெருட்டி அல்லவா கறந்தார்கள். அழைப்பு வரவில்லை.

“Call எடுத்துப்பார் கோபம்வந்து கொதித்துப்போவாய்”

இப்படி நானே எழுதத் தொடங்கி விடுவேனோ என்கிற பயத்தில்
பக்கத்தில் தெரிந்த கராஜூக்கு மோட்டார் சைக்கிளோடு சென்று

“அண்ணை மட்காட்டை ஒருக்கால் கழட்டித் தாங்கோ” என்றேன்.

கழற்றித் தந்தார். எடுத்துக்கொண்டு பிளாஸ்ரிக் ஒட்டும் கடையொன்றிற்கு பஸ்ஸில் பயணித்தேன்

* * *

பஸ்ஸில் பயணிக்கும் போது சின்ன வயதில் படித்த இலங்கை நாட்டார் கதையொன்று ஞாபகத்துக்கு வந்தது.

அந்தக்காலத்தில், சேவலும் மயிலும் நல்ல நண்பர்களாய் இருந்தன. இப்போது இருப்பதைப் போல மயிலுக்கு தோகை இல்லையாம். சேவலுக்கு இருப்பதைப் போலவே மயிலுக்கு இருந்ததாம். ஆனால் சேவலுக்குத்தான் அழகான தோகை இருந்ததாம். சேவல்தான் மழையைக் கணடவுடன் அழகாக ஆடி பார்ப்போரை வசீகரித்ததாம்.

ஒருமுறை இந்தியாவிலிருந்த மயிலின் உறவினரொருவருக்கு கலியாண வீடு. அதில் மயில் கட்டாயம் சென்று கலந்து சிறப்பிக்க வேண்டியிருந்ததால் அங்கு வருபவர்களுக்கு மத்தியில் தான் அழகாக தெரியவேண்டும் என்பதற்காக சேவலிடம் தோகையினை இரவலாகப் பெற்று சூடிக்கொண்டதுடன் தனது வாலினை சேவலுக்குக் கொடுத்துவிட்டு இன்று இரவுக்குள் திரும்பி வந்து தோகையினைத் தந்துவிடுவதாகவும் வாக்குறுதி அளித்துவிட்டு அதிகாலையிலேயே புறப்பட்டுப் பறந்து போயிற்று.

மாலையும் வந்தது மயிலைக் காணோம். இரவாகி இருட்டத்தொடங்கியது. மயிலைக் காணோம்.

முன்னிரவு வந்தது. சேவல் மயிலை அழைக்குமுகமாக

“கொக்கரோக் கோ…”

கூவிப் பார்த்தது.மயிலைக் காணோம்.

நடுச்சாமம் ஆயிற்று. “மயில் வந்திருக்குமோ”

“கொக்கரோக் கோ…”

கூவிப் பார்த்தது சேவல்.
மயிலைக் காணோம்.

பிற்சாமமும் வந்து மறுநாள் பொழுது விடிய இன்னும் சில மணித்தியாலங்களே இருந்தது.

“கொக்கரோக் கோ…”

சேவல் கூவிப் பார்த்தது. ஊஹும் மயிலைக் காணவே இல்லை.

அன்றிலிருந்து இன்றுவரை மயில் இந்தியாவிலிருந்து வந்திருக்குமோ என்கிற நினைப்பில் இரவுகளில் முற்சாமம் – நடுச்சாமம் – பிற்சாமம் – என்று மூன்றுதடவையும் கூவிக்கொண்டிருக்கிறதாம் சேவல்.

* * *

இன்று வியாழக்கிழமை. மாலை ஆகி இருட்டத் தொடங்கி விட்டது. எனது மோட்டார் சைக்கிளுக்கு அந்தச் சம்பவம் நடந்து மூன்றாவது நாள். இந்த மூன்றுநாளும் எனது முதல் குழந்தையைவிட எனது செல்லிடத் தொலைபேசியை செல்லுமிடமெல்லாம் அணைத்தபடி கொண்டு திரிந்தேன்.

மயில்….?

இல்லையில்லை ‘Call’…

வரவில்லை!
வரவில்லை!!
வரவே இல்லை!!!

#இதனால்தெரிவிப்பதுஎன்னவென்றால்
நான் இப்போது மோட்டார் சைக்கிள் திருத்திவிட்டேன்.

இன்சூரன்ஸ்காரர் எனக்கு Call எடுக்கவேண்டாம்.
16.08.2018

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*