;
Athirady Tamil News

மேகாலயாவில் நாளை இடைத்தேர்தல் – முதல்வர் பதவியை தக்க வைப்பாரா கான்ராட் சங்மா?..!!

0

மேகாலயா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் (21 தொகுதிகள்) வென்ற போதிலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, பா.ஜ.க. மற்றும் மாநில கட்சிகளின் ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி ஆட்சியமைத்தது. மக்களவை முன்னாள் சபாநாயகர் பிஏ சங்மாவின் மகனும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா, கடந்த மார்ச் 6-ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.

துரா மக்களவைத் தொகுதி எம்பியான கான்ராட், முதல்வராக பதவியேற்ற 6 மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்காக அவரது சகோதரி அகதா சங்மா, தெற்கு துரா தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் ராணிகோர் தொகுதி எம்எல்ஏ மார்ட்டினும் ராஜினாமா செய்திருந்தார்.

இந்த இரண்டு தொகுதிகளிலும் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தெற்கு துரா தொகுதியில் முதல்வர் கான்ராட் சங்மா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்லோட் மோமின், சுயேட்சை வேட்பாளர்கள் ஜான் லெஸ்லீ கே சங்மா, கிறிஸ் காபூல் ஏ சங்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் முதல்வர் சங்மா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது.

இதேபோல் ராணிகோர் தொகுதியில் தேசிய மக்கள்கட்சி சார்பில் மார்ட்டின் எம் டான்கோ வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து யுடிபி கட்சி சார்பில் பியுஸ் மார்வீன், பிடிஎப் தலைவர் பிஎன் ஷியாம், காங்கிரஸ் சார்பில் ஜாக்கியுஷ் சங்மா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 27-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தலையொட்டி இரண்டு தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் 4 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ராணிகோர் தொகுதி வங்காளதேச எல்லையில் இருப்பதால் எல்லைப் பாதுகாப்பு படையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − seven =

*