;
Athirady Tamil News

மும்பை கிரிஸ்டல் டவர் தீ விபத்து – 17 பேர் உயிரை காப்பாற்றிய சிறுமி..!!

0

மும்பை பரேலில் இந்துமாதா சினிமா தியேட்டர் அருகில் ‘கிறிஸ்டல் டவர்’ என்ற பெயரில் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. 17 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன.

இந்த நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் நேற்று காலை 8.30 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. மின்னல் வேகத்தில் தீ மேல் தளங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. கரும்புகை மண்டலமும் உருவானது.

இதையடுத்து அங்கு குடியிருந்து வந்த மக்கள் பதற்றத்துடன் கீழே இறங்கினார்கள். கரும்புகைக்கு மத்தியில் வெளியே வர முடியாமல் 25 பேர் வீடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் பலர் மயங்கி சரிந்தனர். சிலர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

இந்த தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் 10 வாகனங்களுடன் விரைந்து வந்து, ‘கிரேன்’ உதவியுடன் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்த போராடினர்.

இன்னொரு புறம் மீட்பு படையினரும், போலீஸ் படையினரும் அந்த குடியிருப்பில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியை முழு வீச்சில் மேற்கொண்டனர். ராட்சத எந்திரத்தின் துணையுடன் அவர்களை மீட்டனர்.

மீட்கப்பட்ட 25 பேர் அங்கு இருந்து ஆம்புலன்சுகள் மூலமாக அருகில் உள்ள கே.இ.எம். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்களை மருத்துவர்கள் சோதித்தபோது ஒரு பெண் உள்பட 4 பேர் உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். அவர்களில் 2 பேர் தீயில் சிக்கியும், 2 பேர் மூச்சு திணறியும் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

எஞ்சிய 21 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பலியான 4 பேரது உடல்கள், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்கள் சுபாதா செல்கே (வயது 62), பப்லு சேக் (36), அசோக் சம்பத் மற்றும் சஞ்சீவ் நாயர் ஆவார்கள்.

இந்த தீ விபத்து இரண்டாம் நிலை தீ விபத்து (லெவல்-2) என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். தீயணைப்பு படை வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்துக்கு தவறான மின்சார ‘வயரிங்’தான் காரணம் என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து மும்பை தீயணைப்பு படை அதிகாரி பி.எஸ். ரகங்க்தலே கூறும்போது, “தீ விபத்துக்கு காரணம், தவறான மின்சார வயரிங்தான். இதற்கு காரணமான சொசைட்டி அதிகாரி மீது புகார் செய்யப்படும். இந்த கட்டிடம் பாதுகாப்பு அற்றது. தற்போது மின்சாரம் மற்றும் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது” என கூறினார்.

மேலும், “இந்த குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர். இந்த தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்” எனவும் குறிப்பிட்டார்.

இந்த தீ விபத்தின்போது ஜென் சதாவர்தே என்ற 10 வயது சிறுமி புத்திசாதுரியத்துடன் செயல்பட்டு தன்னை காப்பாற்றிக்கொண்டதுடன், 17 பேரது உயிரை காப்பாற்றி இருக்கிறாள்.

அதாவது, பள்ளியில் தீ விபத்தின்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறி அளித்த பயிற்சியை நினைவில் வைத்திருந்ததால், வீட்டில் உள்ள துணிகளை தண்ணீரில் நனைத்து தனது வீட்டில் இருந்தவர்களுக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் கொடுத்து, அந்த ஈரத்துணியை கண்களிலும் முகத்திலும் ஒற்றி மூச்சு திணறாமல் பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கிறாள்.

அந்தச் சிறுமி கூறியதைக் கேட்டவர்கள், ஈரத்துணியின் உதவியுடன் கண்களையும், முகத்தையும் ஒற்றிக்கொண்டு மூச்சுத்திணறல் ஏற்படாமல் அவர்கள் தங்களை காத்துக்கொண்டனர். ஈரத்துணியானது கரியை (கார்பனை) உறிஞ்சி விட்டு, ஆக்சிஜனை சுவாசிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அந்த மாடியில் தீ விபத்து ஏற்பட்ட உடனேயே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ‘லிப்ட்’ இயங்கவில்லை. எல்லோரும் கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு படிக்கட்டுகளில் இறங்கி ஓட முற்பட்டபோதும், பதற்றம் இல்லாமல் எல்லோரும் வரிசையாக வெளியேற வேண்டும் என்று பள்ளியில் சொல்லித் தந்து இருப்பதை கூறி, பெரியவர்களையெல்லாம் பத்திரமாக வெளியேறும்படி வழிநடத்தி இருக்கிறாள்.

அந்த சிறுமியின் புத்திசாதுரியமான செயலால் 17 பேர் உயிர் பிழைத்தனர். இதற்காக அந்த சிறுமியை பல தரப்பினரும் பாராட்டினர்.

இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பையில் கடந்த டிசம்பர் மாதம் கமலா மில் வளாகத்தில் அமைந்து இருந்த கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியான நிலையில், இந்த தீ விபத்தில் 4 பேர் மட்டுமே பலியானதும், மற்றவர்கள் உயிர்பிழைத்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + six =

*