;
Athirady Tamil News

வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி: விஜயகலா மகேஸ்வரனின் உதவியாளரும், ஊடகவியலாளரும் கைது..!!

0

வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஊடகவியலாளர் ஒருவரும், விஜயகலா மகேஸ்வரனின் உதவியாளரும் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர் நேற்று இரவு கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய விஜயகலா மகேஸ்வரனின் செயலாளர் இன்று கைதாகியுள்ளார்.

யாழிலிருந்து ஒளிபரப்பாகும் டான் தொலைக்காட்சியின் செய்தியாளரான நடராஜா குகராஜ் நேற்றிரவு யாழ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அரச வேலை பெற்றுத்தருவதாக பொதுமகன் ஒருவரிடம் ஜந்து இலட்சம் இலஞ்சம் பெற்று ஏமாற்றியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே இளைஞர் ஒருவரை மேற்கு நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக ஆறு இலட்சம் ஏமாற்றியதாக அவர் மீது சுன்னாகம் காவல்துறையில் முறைப்பாடொன்று இவ்வாண்டின் ஆரம்பத்தில் செய்யப்பட்டிருந்தது. எனினும் காவல்துறை உயர்மட்ட தொடர்புகளை பயன்படுத்தி அவர் கைதாவதிலிருந்து தப்பித்ததுடன் விசாரணைகளையும் முடக்கியதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தற்போது அரச வேலை வாய்ப்பினை பெற்றுத்தருவதாகவும் விஜயகலா மகேஸ்வரனிற்கும் தனக்கும் நெருங்கிய உறவுள்ளதாகவும் தெரிவித்தே பணத்தை பெற்றுக்கொண்டதாகவும் சொல்லப்படுகின்றது. எனினும் உறுதியளித்தது போன்று வேலையினை பெற்றுக்கொடுக்காமையினால் பாதிக்கப்பட்ட நபர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், அவர்கள் தொடர்புகொண்ட தொலைபேசி இலக்கத்தை வழங்கி யாழ். பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக கடந்த 9ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொலைபேசி இலக்கத்தை கொண்டு விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார், குறித்த தொலைபேசி இலக்கம் டான் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் குகராஜ் உடையது என கண்டுபிடித்துள்ளனர்.

அதற்கமைய ஊடகவியலாளர் நேற்று கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய விஜயகலாவின் உதவியாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். விசாரணையின் பின்னர் சந்தேகநபர்களை யாழ். நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சுவிஸ்குமார் தப்பித்த விவகாரத்தில் விஜயகலாவுடன் இணைந்து செயற்பட்டதாக, இந்த ஊடகவியலாளர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அடையாளப்படுத்தப்பட்டு, நாளை (24) விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*