;
Athirady Tamil News

தக்கலை அருகே மாயமான போலீஸ்காரரின் மகன் கொலை செய்யப்பட்டாரா?- 4 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை தீவிரம்..!!

0

கருங்கல் பகுதியை சேர்ந்த பெண் போலீஸ்காரர் ஒருவரின் மகன் கிளாட்சன். இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

அப்போது அவருக்கும் அதே கல்லூரியில் படித்த மாணவி சண்முகபிரியா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இக்காதல் விவகாரம் பற்றி தெரியவந்ததும் மாணவி வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால் எதிர்ப்பை மீறி கடந்த 2014-ம் ஆண்டு அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்பு அவர்கள் கருங்கலில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.

மேலும் அவர்கள் இருவரும் கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டனர். குடும்ப செலவுக்காக மாணவர் கிளாட்சன் கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் திருமணம் ஆன 3 மாதத்தில் கிளாட்சனின் நண்பர் ஒருவர் தான் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதாகவும், தன்னை வழியனுப்ப திருவனந்தபுரம் விமான நிலையம் வரும்படி கூறி அவரை காரில் அழைத்துச் சென்றார்.

ஆனால் அதன்பிறகு கிளாட்சன் வீடு திரும்பவில்லை. திடீரென்று மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சண்முக பிரியா கணவரை தேடத் தொடங்கினார். அப்போது வெளிநாடு செல்வதாக கூறிய நண்பர் ஊரில் சுற்றித் திரிவது தெரியவந்தது. அவரிடம் சென்று கிளாட்சன் பற்றி கேட்டபோது தான் அவரை எங்கும் அழைத்துச் செல்லவில்லை என்று கூறி விட்டார். இதனால் தக்கலை போலீசில் தனது கணவர் மாயமானது பற்றி சண்முக பிரியா புகார் செய்தார். மதுரை ஐகோர்ட்டிலும் கணவரை கண்டுபிடித்து தரும்படி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

கோர்ட்டு உத்தரவுபடி தக்கலை போலீசார் விசாரணை நடத்தியும் மாயமான கிளாட்சன் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு கிளாட்சன் மாயமான வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி சண்முக பிரியா தனது கணவர் கிளாட்சன் மாயமானது தொடர்பாக போலீசார் எடுத்துள்ள நடவடிக்கை பற்றி கேட்பதற்காக தக்கலை போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது தனக்கு கணவரின் நண்பர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவரை பிடித்து விசாரணை நடத்தினால் உண்மை தெரியும் என்றும் கூறினார். மேலும் தனது கணவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கண்ணீருடன் கூறினார்.

இந்த நிலையில் அந்த நண்பர் திடீரென்று மாயமாகிவிட்டார். இது இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனிப்படை போலீசார் இந்த வழக்கு பற்றி தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + 8 =

*